Published : 12 Jul 2017 10:37 AM
Last Updated : 12 Jul 2017 10:37 AM

பாவனா வழக்கில் அடுத்தடுத்து அதிரடி: திலீப் கைது; கேரள சினிமா சங்கங்களில் இருந்து நீக்கம்; உருவபொம்மை எரிப்பு

மலையாளத் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. நேற்றைய படப்பிடிப்பு களும் ரத்து செய்யப்பட்டு கொச்சினுக்கு படையெடுத்தனர் திரையுல கினர். மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் அவசரக் கூட்டம் அங்குள்ள நடிகர் மம்மூட்டியின் இல்லத்தில் நடந் தது. இதில் நடிகர் சங்கத்தின் அடிப் படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட் டுள்ளார் இச்சங்கத்தின் பொருளாளராக இருந்த நடிகர் திலீப்!

‘ஜனபிரிய நாயகன்’ என்னும் அடை மொழி கொண்ட திலீப் இப்போது ஜனங் களின் வெறுப்பை சுமந்த வில்லனாகி யிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்’ அதையே இப்போது மீம்ஸ் களாக தட்டிவிடுகின்றனர் நெட்டிசன்கள். அவர் கைது செய்யப்பட்டபோதும், மக்கள் திரள் இதையே கோஷமாக எழுப்பியது. மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்களில் இருந்தும் திலீப் நேற்று நீக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்சிகளின் மாணவ, இளைஞர் அணி யினர் திலீப்பின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

நடிகை பாவனாவுக்கு காருக்குள் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு ‘120 பி’யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘அங்கிள்’ முதல் கல்யாணம் வரை

மிமிக்ரி, நகைச்சுவை என சகலத்திலும் ஜொலித்த திலீப், எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் பி.ஏ படித்தார். மலையாள இயக்குநர் கமலிடம் 1991-ல் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 1994-ல் ‘மானத்தே கொட்டாரம்’ திரைப்படத்தில் நாயகனாக அரிதாரம் பூசினார். நடிகை மஞ்சுவாரியரைக் காதலித்து 1998-ல் மணந்தார். இத்தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். 2011-ல் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

இந்நிலையில், நடிகை காவ்யா மாதவனோடும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் திலீப். இதுகுறித்து மஞ்சுவாரியரின் தோழியான நடிகை பாவனா அவரிடம் தெரிவித்துள்ளார். தனக்கும், காவ்யாவுக்கும் உள்ள நெருக் கத்தை மஞ்சுவிடம் கூறியதால் திலீப் புக்கு, பாவனா மீது கோபம் ஏற்பட்டது. கடந்த 2014-ல் குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டு மஞ்சுவாரியரும், திலீப்பும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு காவ்யாவுடன் திலீப் கூடுதல் நெருக்கம் காட்டினார்.

திலீப் உதவி இயக்குநராக இருந்த போது, குழந்தை நட்சத்திரமாக அறிமுக மானவர் காவ்யா. அதனால் ஆரம்பத் தில் ‘‘அங்கிள்.. அங்கிள்’’ என்றுதான் அவரை அழைத்துள்ளார். அண்ணன் என்று அழைக்குமாறு திலீப் சொல்லி யுள்ளார். கடைசியில் அதையெல்லாம் மறந்து, இவர்களது காதல் றெக்கை கட்டிப் பறந்து கடந்த ஆண்டு திருமணத் தில் முடிந்தது. ஆனாலும் திலீப்புக்கு, பாவனா மீதான கோபம் மட்டும் தீரவே இல்லை. அதனால்தான் பாவனா கடத்தல் வழக்கில் ஆரம்பத்திலேயே திலீப் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது.

கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட திலீப் - காவ்யா மாதவன். (கோப்பு படம்)



மலையாளத்தில் ‘ஹனிபி டூ’ என்ற படத்தில் நடித்துவந்த பாவனா, அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த பிப்ரவரி 17-ம் தேதி காரில் திரும்பினார். அதானி என்ற பகுதியில் அவரைக் கடத்தி காருக்குள் புகுந்த ஒரு கும்பல், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் பதிவு செய்தது. இதில் அவரது கார் ஓட்டுநர் மார்ட்டின், முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாவனா கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து கொச்சியில் மலையாளத் திரையுலகினர் பிப்ரவரி 19-ம் தேதி திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நடிகர் திலீப்பும் கலந்துகொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது. இது அவரது பெயரில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற அவரது நினைப்பு பொய்யாகிப் போனது. பிப்ரவரி 21-ம் தேதி திலீப்பிடமும் போலீஸார் விசாரித்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், பாவனாவைக் கடத்த ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டதாக வாக்குமூலத்தில் முதல் குண்டை தூக்கிப் போட்டார்.

சிறையில் பிப்ரவரி 25-ம் தேதி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பாவனா, படப்பிடிப்பிலும் பங்கேற்றார். தொடர்ந்து குற்றம் தொடர்பான கணினி, செல்போன் ஆகியவை கோவையில் இருந்து கைப்பற்றப்பட்டன. முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் சிறையில் இருந்து நடிகர் திலீப்புக்கு கடிதம் எழுதிய தாக கூறப்பட்டது. அதே நேரத்தில் பல்சர் சுனில் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக போலீஸில் திலீப் புகார் செய்தார். அப்படியும், இப்படியுமாக 4 மாதங்களாக நீடித்தது இந்தக் குழப்பம்.

இந்நிலையில்தான், திலீப்பை தொடர்புகொள்ளும் நோக்கில், சிறை யில் உள்ள பல்சர் சுனிலிடம் இருந்து திலீப்பின் நண்பர் நாதிர்ஷா, மேலாளர் அப்புண்ணி ஆகியோருக்கு போன் வந்துள்ளது. சிறைக்குள் போன் எப்படி கிடைத்தது என்ற சந்தேகம் வலுத்தது. காக்கநாடு நீதிமன்றத்தில் பல்சர் சுனிலை ஆஜர்படுத்தி கூடுதலாக 5 நாட்கள் அவரை கஸ்டடியில் எடுத்து விசா ரித்தனர் கேரள போலீஸார். இதில் பல்வேறு அதிர்ச்சிகரத் தகவல்களை தெரிவித்தார் சுனில். தொடர்ந்து காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் நடத்திய சோதனை, அதன் பின்னர் திலீப்பிடம் 12 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் இவ்வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துள்ளன.

‘நிரபராதி என நிரூபிப்பேன்’

கைதுக்குப் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய திலீப், ‘‘நான் அப்பாவி. இந்த வழக்கில் என்னை சிக்கவைத்து விட்டனர். நான் நிரபராதி என நிரூபிப் பேன்’’ என்றார். கேரள போலீஸார் கூறும் போது, ‘‘கடந்த 2013-ல் எர்ணாகுளத்தில் உள்ள அபாது பிளாசா 410-வது அறையில் வைத்து திலீப் ஏற்கெனவே பாவனாவைக் கடத்த பல்சர் சுனிலுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார். எனவே, இது 4 ஆண்டுகளாக திட்டமிட்ட சதி’’ என்கின்றனர்.

‘யாரும் தப்ப முடியாது’

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘‘இந்த வழக்கில் தொடர்பு உடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. வேறு யாருக்கேனும் தொடர்பு இருந்தாலும் அவர்களும் பிடிபடுவார்கள்’’ என்றார்.

சமூக வலைதளங்களில் பரவும் திலீப்பின் ‘வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்’ பட போஸ்டர்.



3 படங்கள்.. ரூ.100 கோடி இழப்பு

திலீப் நடிப்பில் கடந்த 7-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட திரைப் படம் ‘ராமலீலா’. ரூ.30 கோடி பட்ஜெட் டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இப்படம் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதேபோல திலீப் நடிப்பில் ‘கம்மார சம்பவம்’, ‘புரபசர் டிங்கன்’ ஆகிய படங்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிலையில் உள்ளன. இவற்றின் தயாரிப்பு, விநியோகம், சேட்டிலைட் ஒளிபரப்பு என ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தீலிப்புக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ராம்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் காவ்யா மாதவனின் நிறுவனத்தில் இருந்து கிடைத்திருப்பதால் அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்று கூறப் படுகிறது.

தைரியமானவர் பாவனா

கேரளாவில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர் மலையாள திரையுலகைச் சேர்ந்த டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி. இவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த சம்பவம் மிகவும் துயரத்தை தருகிறது. அதே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரைத்துறையே இப் படித்தான் என குறை சொல்வதையும் ஏற்க முடியாது. ஒரு கலைஞன் கலைச் சேவையை மட்டும் செய்வது வரை பிரச்சினை இல்லை. ரியல் எஸ்டேட் தொடங்கி, சகலத்தையும் தனதாக்குவதால்தான் இது போன்ற கூடாநட்புகள் வருகிறது.

ஒருமுறை இந்த விஷயம் குறித்து சங்கத்தில் பேசிய திலீப், ‘பாவனாவின் நட்பு வட்டம் சரியில்லை. அதனால் தான் இதுபோல நடந்துள்ளது’ என்ற தொனியில் பேசினார். இப்போது திலீப்பின் கூடாநட்பு தான் அவருக்கு விரோதியாகி உள்ளது. பாவனா பிரபலமானவர் என்பதால் விஷயம், வெளியில் வராது. தானும் பகையை தீர்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி இவ்வாறு செய்திருக்கின்றனர். ஆனால், பாவனா பிரபலம் என்ற முகத்திரையை தூக்கி எறிந்துவிட்டு, வெளியே வந்ததால் திலீப் கைதாகியுள்ளார். நான்கு மூலைக்குள் முடங்கியிருந்தால்தான் பெண்ணினம் வேதனைப்பட வேண்டும். இந்த உணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x