Published : 09 Sep 2016 11:52 AM
Last Updated : 09 Sep 2016 11:52 AM
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து நாளை ஆந்திராவில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 20.6.2014-ல் மாநிலங்களவையில் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை சிறப்பு அந்தஸ்து வழக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் டெல்லி யில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, சுஜனா சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத் தின் முடிவில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது. ஆனால், சிறப்பு நிதியுதவி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாளை ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு அளித்துள்ளனர்.
பேரவையில் அமளி
இதனிடையே ஆந்திர பேரவை நேற்று ஹைதராபாத்தில் கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கிடையே ஜிஎஸ்டி மசோதாவை ஆதரித்து தீர்மானம் நிறைவேறியது. சிறப்பு அந்தஸ்து தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT