Published : 13 Dec 2013 09:27 PM
Last Updated : 13 Dec 2013 09:27 PM
தலைநகர் டெல்லியைத் தாக்க, லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீட்டியிருந்த திட்டம், அதன் கூட்டாளி ஒருவரின் கைதால் முறியடிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்டத்தில் இருந்ததாக கூறப்படும் இந்த தாக்குதல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த தீவிரவாதி ஷாகித், ஹரியானாவின் மேவாட் பகுதியில், அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக டெல்லி போலீஸ் அவரை பின் தொடர்ந்துள்ளது.
நூ மாவட்டத்தின் சோடி மெவ்லி கிராமத்திலுள்ள ஒரு மசூதியில் ஷாகித் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரது சொந்த ஊரான பஸீத்பூர் கிராமும் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.
சிறப்பு படை காவல் துறை துணை ஆணையர் சஞ்ஜீவ் குமார் யாதவ் பேசுகையில், "லஷ்கர் தீவிரவாதி ஜாவேத் பலூச்சி, மேவாட்டில் இருக்கும் ஒருவரிடம் தொடர்பில் உள்ளார் என்கிற ரகசிய தகவல், நவம்பர் மாத இறுதியில் கிடைத்தது. அவர்கள் தலைநகரில் தீவிரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர். மேலும் விசாரிக்கையில், ஒரு தீவிரவாதி டெல்லி, ஹரியானா மற்றும் ராஜாஸ்தான் பகுதிகளுக்கு சென்று வந்துள்ளதாகத் தெரிந்தது. முழு திட்டத்தையும் தெரிந்து கொள்ள சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டது. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு ஷாகித்தை கைது செய்துள்ளோம்" என்றார்.
ஷாகித், ஆறு ஏழு மாதங்களுக்கு முன் தான் லஷ்கர் இ தொய்பாவில் சேர்ந்ததாகவும், தனக்கு மேவாட் பகுதியில் உள்ள ஆட்கள் மூலம் தான் ஆணைகள் வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும், லஷ்கர் அமைப்பு மேவாட் பகுதியில் ஊடுருவியுள்ளனர். அங்கு அவர்களுக்கு பலர் வேலை செய்கின்றனர். பாகிஸ்தானில் இருக்கும் லஷ்கர் கமேண்டர்க்ள் இவர்களுக்கு வேலை கொடுப்பார்கள். அவர்கள் மூலம் தான் தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது. இப்போது உள்ளூரில் இருப்பவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
ஷாகித்திடம் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புக்கான தேவைகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது என யாதவ் தெரிவித்தார்.
லஷ்கர் அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும் பலூச்சியின் தலைமையில் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்கு இந்த திட்டம் பரவியிருந்தது. மேவாட்டில் உள்ள நண்பர் மூலம் தான் ஷாகித், பலூச்சியை சந்தித்துள்ளார். அவரை சந்திக்க, ஷாகித் பாகிஸ்தான் கூட சென்று வந்துள்ளார். பலூச்சி, ஷாகித்திடம் தொலைப்பேசியில் பேசிய உரையாடல்களை போலீஸ் கண்காணித்துள்ளனர். பதிவும் செய்துள்ளனர். இதுவே ஷாகித் கைதிற்கு உதவியாக இருந்துள்ளது. ஷாகித்தின் வீட்டில் இருந்த ஒரு டைரியில், தாக்குதலைப் பற்றிய விரிவான திட்டம் இருக்கிறது. புது டெல்லியில் மக்கள் கூடும் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த இருந்ததாகத் தெரிகிறது.
ஷாகித் கைதானதைத் தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் அடையாளம் கண்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT