Published : 29 Sep 2016 07:42 PM
Last Updated : 29 Sep 2016 07:42 PM
காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலின் போது ராணுவ கமாண்டோக்கள் சுமார் 7 இடங்களில் தாக்குதல் மேற்கொண்டதாக உயர்மட்ட ராணுவ வட்டாரங்கள் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்துள்ளது.
இதில் பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கும் என்று கூறிய உயர்மட்ட ராணுவ வட்டாரம், இந்தத் தாக்குதல் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
யூரி தாக்குதலுக்குப் பிறகே ராணுவம் அங்கு தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “தாக்குதல் நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது. யூரி தாக்குதலுக்கு முன்னதாகவே தீவிரவாத முகாம்களுக்கான தடயங்கள் கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் தெரிந்தது ராணுவத்தினருக்கு கவலை அளித்ததாக தெரிவிக்கப்பட்டது” என்றார்.
மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “பாகிஸ்தான் தூதரிடம் நிறைய முறை கோரிக்கை விடுக்கப்பட்ட பின்பும் எச்சரிக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை” என்றார். மேலும் கடந்த 2 மாதங்களில் 19 முறை ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது என்றும் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் குறிப்பாக இதே பகுதியில் 4 இடங்களில் தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “குறிப்பிட்ட புலனாய்வு தகவல்களுக்குப் பின்பே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் பலியெனவும் 9 பேர் காயமடைந்தனர் எனவும் அந்நாடே ஒப்புக் கொண்டுள்ளது.
பொதுவாக கட்டுப்பாட்டு எல்லையில் இந்திய ராணுவம் நம் பகுதியிலிருந்துதான் துப்பாக்கிச் சூடு நடத்தும் தீவிரவாதிகள் ஊடுருவிய பிறகுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுவாக இத்தகைய தீவிரவாத முகாம்கள் பயிற்சி முகாம்கள் போல் நிரந்தரமானவை அல்ல தற்காலிகமானவை. ஊடுருவும் முன்பு இப்பகுதியில்தான் தீவிரவாதிகள் முகாமிடுவர்” என்றார்.
தீவிரவாத முகாம்களில் தாக்குதல்களினால் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் அதிகாரிகள். சில தகவல்கள் கூறும்போது இந்திய ராணுவத்தினர் கால்நடையாக கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து சென்றனர் என்றும் மேலும் சிலர் எம்.ஐ-17 ரக காப்டர்கள் மூலம் எல்லையக் கடந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மத்திய அமைச்சர் ரத்தோர் காப்டர்கள் கடந்தது என்று கூறப்படுவதை மறுத்தார்.
தாக்குதல் நடவடிக்கை முடிந்த பிறகு அதிகாலையில் ராணுவத்தினர் பாதுகாப்பாக முகாம்களுக்குத் திரும்பிய பிறகு அரசு தொலைபேசியில் தொடர்பு கொள்ளல் முயற்சிகளை மேற்கொண்டது. ராணுவத் தளபதி ரன்பீர் சிங், பாகிஸ்தான் ராணுவத் தலைமையை அழைத்து தாக்குதல் முடிந்தது என்றும் இதனை தொடரப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
அயலுறவு செயலர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஆகியோர் பாகிஸ்தானுடனும், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடத்திலும், மேற்கு ஆசியாவின் முக்கிய நாடுகளுக்கும் தொடர்பு கொண்டு இந்த ராணுவ நடவடிக்கை பற்றி தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT