Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி?

மக்களவைத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகளிடையே கூட்டணி ஏற்படும் என்று தெரிகிறது.

கால்நடைத் தீவன வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். இதை தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் செளத்ரி கட்சித் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். வியாழக்கிழமை அவர் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது பிகார் மாநில நிலவரம் குறித்தும் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

2004 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன சக்தி கூட்டணி பிகாரின் 40 தொகுதிகளில் 29 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் தனியாகவும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்கு 4 இடங்களும், காங்கிரஸுக்கு 2 இடங்களும் மட்டுமே கிடைத்தன. எனவே, 2004 போன்று மீண்டும் கூட்டணி அமைக்க மூன்று கட்சிகளும் நெருங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லாலு பிரசாத் ஜாமீனில் விடுதலையானதும் சோனியா காந்தி அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x