Published : 04 Apr 2014 04:49 PM
Last Updated : 04 Apr 2014 04:49 PM

பெண் நிருபர் பலாத்காரம்: 3 பேருக்கு தூக்கு தண்டனை; மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை சக்தி மில் வளாகத்தில் அடுத்தடுத்து சில வார இடைவெளியில் டெலிபோன் ஆபரேட்டர், பெண் புகைப்பட நிருபர் என 2 பேர், கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் இழைத்து திருந்தாமல் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை வழங்க வகை செய்து இந்திய தண்டனை சட்டம் 376 இ பிரிவில் திருத்தம் கொண்டு வந்தபிறகு முதல்முதலாக இந்த வழக்கில் அமல்படுத்தப்பட்டது.

மூன்று பேரும் திருந்த வாய்ப்பு இல்லை என்பதால் இந்த பிரிவின் கீழ் மூன்று குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிப்பதாக முதன்மை செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி தீர்ப்பு வழங்கினார்.

முன்னதாக மூவருக்கும் திருத்திய சட்டப்பிரிவின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் வலியுறுத்தினார்.

மும்பை சக்தி மில் வளாகத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற புகைப்பட பெண் நிருபர் கும்பல் ஒன்றால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் ஜாதவ், (19), காசி்ம் பெங்காலி (21), முகம்மது சலீம் அன்சாரி (28), ஆகியோர் இந்திய தண்டனை சட்டம் 376(இ) பிரிவின் கீழ் (திரும்பவும் பலாத்கார குற்றம் புரிதல்) குற்றம் இழைத்துள்ளவர்கள் என முதன்மை செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி வியாழக்கிழமை அறிவித்தார்.

பெண் புகைப்பட நிருபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதற்கு ஒரு மாதம் முன்பு ஜூலையில் சக்தி மில் வளாகத்தில் 18 வயது டெலிபோன் ஆபரேட்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மூவருக்கும் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சக்தி மில் வளாகத்துக்கு அலுவலக ஊழியர் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொண்டு செய்தி சேகரிக்கச் சென்றபோது அங்கே இருந்த விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலீம் அன்சாரி, சிராஜ் ரஹ்மான் மற்றும் மைனர் சிறுவன் ஆகியோர் சேர்ந்து புகைப்பட பெண் நிருபரை பலாத்காரம் செய்தனர். இரு சம்பவத்திலும் பொது குற்றவாளிகளான மூவருக்கும் மரண தண்டனையும் பெண் புகைப்பட நிருபர் பலாத்கார வழக்கில் சிராஜுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x