Published : 11 Oct 2013 01:20 PM
Last Updated : 11 Oct 2013 01:20 PM

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கூட்டு முயற்சி

சர்வதேச பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு சமாளிக்க கிழக்கு ஆசிய நாடுகளிடையே கூட்டுச் செயல்பாடு தேவை என கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

புரூனேயில் தலைநகர் பண்டார் செரி பகவனில் 8-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசியதாவது:

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் கடுமையான சூழலை சந்தித்து வரும் நிலையில், கூட்டாக செயல்படுதல், ஒத்துழைப்பு, கூட்டு முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய சூழலில் நிகழும் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

உலகின் பிற பகுதிகளில் நிலவும் பொருளாதார ஸ்திரமற்ற நிலை, அரசியல் போராட்டங்கள், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளையும் பாதிக்கிறது. இது தவிர, நமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பன்முகத்தன்மை, கருத்து வேறுபாடுகளால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய தருணத்தில் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால்தான், இதுவரை யில்லாத வகையில் செழிப்புடன் மக்கள் வாழும் நிலையை நனவாக்க முடியும். கூட்டாக இணைந்து அமைதி மற்றும் வளத்தை ஏற்படுத்த இந்த கிழக்கு ஆசிய மாநாடு உதவும்” என்றார் மன்மோகன் சிங்.

கிழக்கு ஆசிய பேரவை அமைப்பில் ஆசியான் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளும், அதன் கூட்டாளிகளாக இருக்கும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, நியூஸிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன.

ஆசியான் அமைப்பில் புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், லாவோஸ், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பின்னர், ஆசியான் இந்தியா 11-வது உச்சி மாநாட்டில் பிரதமர் பேசியதாவது:ஆசியான் நாடுகளுடன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ள வசதியாக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் தூதரகம் அமைக்கப்படும். இந்த விவகாரங்களை கவனிப்பதற்கென தனி தூதர் நியமக்கப்படுவார். சேவை மற்றும் முதலீட்டுப் பிரிவில் ஆசியான் அமைப்பில் உள்ள நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள விரும்புகிறோம்.

இந்தியா, மியான்மர், தாய்லாந்தை இணைக்கும் நெடுஞ்சாலைப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. 2016-க்குள் இத்திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

நாளந்தா ஒப்பந்தம்

நாளந்தா பல்கலைக்கழகத்தை மறுநிர்மாணம் செய்வதில் தங்களின் பங்களிப்பை அளிப்பதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா, கம்போடியா, சிங்கப்பூர், புரூனே, நியூஸிலாந்து, லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x
News Hub
Icon