Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்: விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்

மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பாக, மகாராஷ்டிர அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை மற்றும் அதன் மீது அரசின் நடவடிக்கை அறிக்கை ஆகியவை அம்மாநில சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

விசாரணை கமிஷன் அறிக்கை மீது விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில் விசாரணை கமிஷனின் அறிக்கையை நிராகரிப்பதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ராணுவ வீரர்கள், முன்னாள் ராணு வீரர்களுக்கு குடியிருப்புகள் கட்ட நிலம் வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் 2002 பிப்ரவரியில், தெற்கு மும்பை கொலாபா பகுதியில் மகாராஷ்டிர அரசு நிலம் ஒதுக்கீடு செய்தது. இதில் ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி சார்பில் 31 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் சுமார் 10 ஆண்டு காலத்தில் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், இவர்களின் உறவினர்கள் விதிகளை மீறி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றனர்.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. மேலும் மாநில அரசு சார்பில் கடந்த 2011 ஜனவரியில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.ஏ.பாட்டீல் தலைமையில் இருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

ஆதர்ஷ் குடியிருப்பு நிலம் யாருக்கு சொந்தமானது, கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக இது ஒதுக்கீடு செய்யப்பட்டதா, கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கியதில் விதிமீறல்கள் உள்ளனவா என்பது உள்பட பல்வேறு அம்சங்களை கமிஷன் ஆராய்ந்தது.

விசாரணை கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி தாக்கல் செய்தது. இதில் ஆதர்ஷ் குடியிருப்பு நிலம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமானது அல்ல. மகாராஷ்டிர அரசுக்கு சொந்தமானது. கார்கில் வீரர்களின் குடும்பத்தினருக்காக இவை ஒதுக்கப்பட்டவை அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணை கமிஷன், 2 பகுதிகள் கொண்ட தனது இறுதி அறிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் அரசிடம் அளித்தது.

விசாரணை கமிஷனின் இந்த அறிக்கையையும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டவை மீது அரசின் நடவடிக்கை அறிக்கையையும் மகாராஷ்டிர அரசு, சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

மகாராஷ்டிர சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று முதல்வர் பிருதிவிராஜ் சவான் இவற்றை அவையில் தாக்கல் செய்தார். சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கை, மும்பை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதால், உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் இந்த அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில், ஆதர்ஷ் குடியிருப்பு சொசைட்டிக்கு முன்னாள் முதல்வர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில் குமார் ஷிண்டே, அசோக் சவான், வருவாய்த் துறை முன்னாள் அமைச்சர் சிவாஜி ராவ் நியங்கேகர் படேல், நகர்ப்புற வளர்ச்சித் துறை முன்னாள் அமைச்சர்கள் சுனில் தட்காரே, ராஜேஷ் தோபே ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஆதர்ஷ் குடியிருப்பு சொசைட்டியில் மொத்தமுள்ள 102 உறுப்பினர்களில் 25 பேர் தகுதியற்றவர்கள். இவர்கள் தங்கள் உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 22 பேர் பினாமி பெயரில் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்” என்றும் கூறப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிர முன்னாள் பேரவைத் தலைவர் பாபா சாகேப் குபேகர், சிவசேனை முன்னாள் எம்பி. சுரேஷ் பிரபு, முன்னாள் முதல்வர் அசோக் சவானின் 3 உறவினர்கள் இதில் ஒதுக்கீடு பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அறிக்கை தாக்கல் செய்தவுடன், அதன் மீது விவாதம் நடத்த வலியுறுத்தி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். ஆனால் பேரவைத் தலைவர் திலீப் வால்சே பாட்டீல் இதற்கு அனுமதி மறுத்தார்.

“விசாரணை கமிஷன் அறிக்கையின் முதல் பாகம் பற்றி அரசு பேச மறுப்பது ஏன்?” என்று சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் ஏக்நாத் காட்சே கேள்வி எழுப்பினார்.

“சிபிஐ குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் சங்கரநாராயணன் அனுமதி மறுத்துள்ள தாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு அரசின் விளக்கம் தேவை” என்றார் அவர்.

மேலும் மாநில முன்னாள் முதல்வர், முன்னாள்

பேரவைத் தலைவர் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு, “குற்றவாளிகள் சிலரை பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது” என்றார் காட்சே. இதற்கு முதல்வர் பிருதிவிராஜ் சவான் பதில் அளிக்கையில், “விசாரணை கமிஷன் அறிக்கை

யின் முதல் பாகம் ஏற்கெனவே அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார். ஆனால் ஆளுநர் அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக முதல்வர் எதுவும் கூறவில்லை.

இதையடுத்து காட்சே, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்றார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். உடனே ஆளும் கட்சி உறுப்பினர்களும் அவையின் மையப்பகுதிக்கு விரைந்து கோஷமிட்டதால் அவையில் அமளி நிலவியது. இதையடுத்து அவையை பேரவைத் தலைவர் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் விசாரணை கமிஷனின் அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரிப்பதாக மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவான் அறிவித்தார். மக்களின் நலனுக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார் அவர். எனினும் அமைச்ச

ரவை முடிவில் உள்ள பொது நோக்கம் குறித்து அவர் விவரிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x