Published : 14 Nov 2014 08:27 AM
Last Updated : 14 Nov 2014 08:27 AM
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நேருவின் கொள்கைகளுக்கு எதிராகவும், மதவாதத்தைத் தூண்டும் வகையிலும் செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூறியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த தின விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நேற்று நடை பெற்ற கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: நேருவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சிதைக்கும் வகையில் இப்போது சிலர் செயல்படுகின்றனர். அவரின் ஆளுமையை மட்டுமல்ல, கொள்கைகளையும் அழிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். நேரு இப்போது உயிரோடு இருந்திருந் தால், மதவாதச் சக்திகளை எதிர்த்துப் போராடுமாறு காங்கிரஸ் காரர்களுக்கு அறிவுறுத்தியிருப் பார். இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்க மதச்சார்பற்ற கொள்கை வீரராக செயல்பட்டிருப்பார்.
கடந்த 129 ஆண்டு கால வரலாற்றில் பல்வேறு இன்னல்களை காங்கிரஸ் சந்தித்துள்ளது. அவை அனைத்தும் கட்சியை மேலும் வலுப்படுத்த உதவியுள்ளன.
மக்களிடையே மிகுந்த அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற நாட்டின் முதல் பிரதமரான நேரு நினைத்திருந்தால், நாட்டை வேறு வழியில் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், நீதியிலும், முற்போக்குச் சிந்தனையிலும் பற்று கொண்ட நேரு, தனிநபரை விட அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். அதனால், மாற்று கருத்துகளுக்கு நாட்டில் இடம் கிடைத்தது.
அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங் களுக்கு அன்று நேரு வித்திட் டிருக்காவிட்டால், இப்போது செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியிருப்பது சாத்தியமாகியிருக்காது. இவ்வாறு சோனியா பேசினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தவறேதும் இழைக்கவில்லை என்று நான் கூறவில்லை. நாங்களும் தவறு செய்துள்ளோம். ஆனால், எங்களின் கொள்கைகளில் தவறேதும் இல்லை. அன்பு, சகோதரத்துவத்தை மையப்படுத்தியே நாங்கள் இயங்கி வருகிறோம். இன்றைய கால கட்டத்தில் அன்பு, சகோதரத்துவம் போன்ற நம்பிக்கைகள் எல்லாம் பலவீனமடைந்து வருகின்றன.
இப்போது மிகவும் கோபமாக உள்ளவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் உள்ளது. ஆங்கிலம் வேண்டாம்; இந்தியில் பேசுங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்திருந்தால், நமது இளைஞர்கள் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் படித்திருக்க முடியாது. வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்காது.
இன்றைய ஆட்சியாளர்கள், தேர்தலின்போது பல வாக்குறுதி களை அளித்தனர். ஆனால், அதில் எதையும் நிறைவேற்றவில்லை. தூய்மையான இந்தியா என்ற திட்டத்தின் பெயரில் போட்டோ வுக்கு போஸ் கொடுப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
நாட்டை மீண்டும் காங்கிரஸ் தலைமை வகித்து வழிநடத்தும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இப்போது ஆட்சியில் உள்ளவர்களை எதிர்த்துப் போராடும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
மோடிக்கு அழைப்பில்லை
நேரு பிறந்த தினத்தையொட்டி வரும் 17, 18-ம் தேதிகளில் சர்வதேச கருத்தரங்கு நடத்த காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக கூட்டணி தலைவர்கள் அழைக்கப்படவில்லை. அதே சமயம், திரிணமூல் காங்கிஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT