Last Updated : 15 Feb, 2014 06:11 PM

 

Published : 15 Feb 2014 06:11 PM
Last Updated : 15 Feb 2014 06:11 PM

மக்களின் நம்பிக்கையைத் தகர்த்து விட்டது ஆம் ஆத்மி: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

மாறுபட்ட அரசியலைப் பார்க்க விரும்பிய மக்களின் நம்பிக்கையை ஆம் ஆத்மி கட்சி தகர்த்து விட்டது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

டெல்லியில் இதுவரை ஆட்சி செய்த அரசுகளிலேயே மிகவும் மோசமானது அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுதான். கடந்த 49 நாட்களாக எந்தக் கொள்கையும் இல்லாமல், வெறும் வார்த்தை ஜாலத்திலேயே ஆட்சி நடத்தியவர்கள்தான் இவர்கள்.

சட்டசபையில் வெறும் 28 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, வெட்கமின்றி காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிருபித்தது. அதிலும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்கள் அரசியல் முதிர்ச்சியின்றி சில நேரங்களில் விசித்திரமாகவும் நடந்துகொண்டனர்.

குடிநீர், சுகாதாரம், கல்வி, போகுவரத்து ஆகிய மக்களுக்குத் தேவையான எந்தப் பிரச்சினை பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. மத்திய உள்துறை அமைச்சர், டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் காவல்துறை ஆணையர், ஆப்பிரிக்க பெண்கள் என யாரையாவது எதிர்த்து போராடுவதையே அன்றாட பணியாக மேற்கொண்டிருந்தனர்.

பொய்களை மட்டும் பேசி, கற்பனையாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டு பிரச்சாரமும் தாக்குதல்களும் நடத்தி வந்தனர். தங்களைத் தவிர மற்ற அனைத்து தலைவர்களும் ஊழல்வாதிகள் என்று பிரச்சாரம் செய்து வந்த அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரியத் துவங்கியது.

தாங்கள் அரசு தலைமை செயலகத்தில் வெண்கல கடையில் புகுந்த யானைகள் என்பதையும் தெருக்களில் போராட மட்டும்தான் தகுதியானவர்கள் என்பதையும் அவர்கள் உணர்ந்து விட்டதால், ஆட்சியிலிருந்து வெளியேற ஜன் லோக் பால் மசோதவைப் பயன்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு இயற்றிய சட்டத்திலிருந்து எவ்விதத்திலும் வேறுபாடு இல்லாத லோக்பால் மசோதாவை புரட்சிகரமானது என பொய் பிரச்சாரம் செய்தனர். அதையும் வழக்கத்துக்கு மாறாக அறிமுகம் செய்து, ஆட்சியை விட்டு வெளியேற ஒரு சாக்குப்போக்கை உருவாகிக் கொண்டனர் என்று ஜேட்லி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x