Published : 30 Oct 2013 04:51 AM Last Updated : 30 Oct 2013 04:51 AM
2ஜி அலைக்கற்றை முறைகேடு: ஜே.பி.சி. அறிக்கை மக்களவைத் தலைவரிடம் அளிப்பு
2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரை விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி.) அறிக்கை, மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
2ஜி அலைக்கற்றை முறை கேட்டுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, பிரதமரைத் தவறாக வழிநடத்திவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பாஜக உள்ளிட்ட 6 கட்சிகள் ஏற்கவில்லை. தங்களின் மறுப்பு அறிக்கையை அவர்கள் ஏற்கெனவே அளித்துள்ளனர். அதில், ஜே.பி.சி. அறிக்கை, முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்று விமர்சித்திருந்தனர். ஜே.பி.சி. அறிக்கையையும், 6 கட்சிகளின் மறுப்பு அறிக்கையையும் மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு தலைவர் பி.சி.சாக்கோ செவ்வாய்க்கிழமை அளித்தார்.
1998 முதல் 2009 வரை நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விசாரித்து, ஜே.பி.சி. அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கட்சிகளின் 5 மறுப்பு அறிக்கைகளில் பி.சி. சாக்கோ தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றங்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் குறிப்புகளில் இடம்பெற்றிருந்த தவறான வார்த்தைப் பிரயோகங் களை மாற்றியிருப்பதாக அவர் தெரிவித்தார். மாற்றுக் கருத்துகளை உள்ளடக்கிய இந்த மறுப்பு (உடன்படா) அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
கட்சிகள் எதிர்ப்பு...
ஜே.பி.சி. அறிக்கை தயாரிக்கப்பட்ட பின், அதை ஏற்பது தொடர்பான வாக்கெடுப்பில் பாஜகவின் 5 உறுப்பினர்கள், பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் தலா ஓர் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். பாஜகவைச் சேர்ந்த கோபிநாத் முண்டேவும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பாஜகவின் அறிக்கையில், ஜே.பி.சி. குழு முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரப்பட்டிருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஜே.பி.சி.யிடம் விளக்கம் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், அவரை அழைக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்...
ஜே.பி.சி. அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கை யாளரின் அறிக்கையில் தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு நடைமுறை தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் தவறாக வழிநடத்தியுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராகக் குற்றம்சாட்டுவதற்கு முகாந்திரம் ஏதுமில்லை. 2ஜி உரிமங்கள் ஒதுக்கீட்டுக்கு முன்பாக 2008-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலத்தின் மூலம் மேற்கொள்வது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எதுவும் எடுக்கவில்லை. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஜக்மோகனின் (அவரின் கருத்தை அப்போதைய நிதிய மைச்சர் யஷ்வந் சின்ஹாவும் ஆதரித்தார்) எதிர்ப்பையும் மீறி உரிமக் கட்டணத்தைச் செலுத்து வதற்கான தவணைக்குக் கால அவகாசம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்பட்டன. அலைக்கற்றை மாற்றம் தொடர் பான சலுகைகளைத் தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்களுக்கு வழங்கியதில் ரூ.42 ஆயிரத்து 80 கோடி வருவாயை அரசு இழந்தது. இவ்வாறு ஜே.பி.சி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
WRITE A COMMENT