Published : 21 Jul 2016 02:06 PM
Last Updated : 21 Jul 2016 02:06 PM
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த மாதம் 1-ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து, அவரது ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கும்படி கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி மற்றும் வழக்கில் தொடர்புடைய 4 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.கே.மத்தா, ஜாமீன் மனுக்கள் குறித்து அமலாக்கப்பிரிவு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் வழங்கும்படி நீதிபதியிடம் கோரினார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT