Published : 09 Feb 2014 09:44 AM
Last Updated : 09 Feb 2014 09:44 AM
ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா வரும் 21-ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்ய ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
இந்தத் தகவலை விஜயவாடா காங்கிரஸ் எம்.பி லகடபாடி ராஜகோபால் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆந்திர மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்தால்தான் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெறும். இல்லையேல் மக்கள் அத்தியாவசியத் தேவையான குடிநீருக்கே அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.
நக்சலைட்கள் மற்றும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரிக்கும். தெலங்கானா தனி மாநிலம் உருவாக வகை செய்யும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய குடியரசுத் தலைவர் அனுமதிக்க மாட்டார் என நம்புகிறேன். மாநிலம் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
தெலங்கானா மசோதாவை சட்டமன்றத்தில் நிராகரித்து திருப்பி அனுப்பினார். டெல்லியில் கட்சி மேலிடத்துக்கு எதிராக துணிந்து மவுனப் போராட்டம் மேற்கொண்டார். குடியரசுத் தலைவரை சந்தித்து ஆந்திர சட்டமன்றத்தில் நிராகரிக் கப்பட்ட மசோதாவில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறி அதனை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தினார்.
இதையெல்லாம் மீறி ஒருவேளை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கிரண் குமார் ரெட்டி என்னிடம் கூறினார்
நாடாளுமன்றத்தில் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் மாநில பிரிவினையை யாராலும் உண்டாக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT