Published : 26 Nov 2014 10:05 AM
Last Updated : 26 Nov 2014 10:05 AM

ஆந்திர புதிய தலைநகரில் 44 மாடி தலைமைச் செயலகம்

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆந்திர தலைநகரில், 44 மாடிக்களை கொண்ட கட்டிடத்தில் தலைமைச் செயலகம் அமையவுள்ளது. புதிய தலைநகர் அடிக்கல் நாட்டு விழா, அடுத்த ஆண்டு தெலுங்கு வருடப்பிறப்பு, என்.டி.ஆர் பிறந்த நாள் அல்லது மாநிலம் உதயமான ஜூன் 2-ம் தேதி நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு, 13 மாவட்டங்களை கொண்ட புதிய ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா-குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரையின் இருபுறமும் அழகிய தலைநகர் அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

தலைநகர் அமைக்க சிங்கப்பூர் அரசிடம், திட்ட வரை படங்களை தொகுத்து வழங்கும்படி முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு சிங்கப்பூர் அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வளர்ச்சிப் பணிகளுக்கு மேலும் 9 மாத கால அவகாசம் தேவைப்படுவதாக கூறப் படுகிறது. ஆனால் இதற்குள் அடிக்கல் நாட்டு விழா நடத்தினால் பணிகள் வேக மாக நடைபெறும் என முதல்வர் கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரில் உள்ள புகழ்பெற்ற பிருந்தா வனம் பூங்காவை போன்று புதிய தலை நகரில் கிருஷ்ணா நதிக்கரையில் பிரம் மாண்டமான பூங்கா அமைக்கப்பட உள்ளது. பிரகாசம் அணைகட்டிலிருந்து போருபாளையம் வரை 20 கி.மீ தூரம் வரை, கிருஷ்ணா நதிக்கரை ஓரம் மாநில தலைநகரின் ஒரு பகுதி அமைய உள்ளது. இதில் சுமார் அரை கி.மீ அகலத்தில் அழகான பூங்கா அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதன் அருகில் 6 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தடத் தில் 44 அடுக்கு மாடி கட்டிடத்தில் ஆந்திர தலைமை செயலகம் அமைய உள்ளது.

இதன் அருகிலேயே பளிங்கு, கிரானைட் கற்களால் சட்டப்பேரவைக் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவையான ‘விதான் சவுதா’ போன்று அகலமான தோற்றத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த கட்டிடம் இருக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அரசுக் கட்டிடங்கள் அனைத்தும் குண்டூரில் அமையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

விஜயவாடாவில் முதல்வரின் அலுவலகம், வீடு போன்றவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தலை நகர் அடிக்கல் நாட்டு விழா வரும் ஏப்ரல் மாதம் தெலுங்கு வருடப்பிறப்பு அல்லது என்.டி. ராமாராவ் பிறந்த நாளான மே. 28 அல்லது மாநிலம் உதயமான ஜூன் 2-ல் இருக்கலாம் என முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x