Published : 13 Nov 2014 10:12 AM
Last Updated : 13 Nov 2014 10:12 AM
இந்தியாவில் பொருளாதார, தொழில், வர்த்தக முன்னேற்றத்தில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இதில் ஆசியான் நாடுகளும் கூட்டாளிகளாக பங்கேற்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மியான்மர் தலைநகர் நேபிடாவில் 12-வது இந்தியா - ஆசியான் மாநாடு நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மியான்மர் அதிபர் தெய்ன் செய்ன் தொடக்க உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்தியாவுக்கும், ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், மதம், கலாச்சாரம், கலை, பாரம்பரிய ரீதியாக பழங்காலம் தொட்டே நெருங்கிய தொடர்பு உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு தற்போதும் நட்புறவு தொடர்கிறது.
இப்பிராந்தியத்தில் சமநிலையும், அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட இந்தியாவும், ஆசியான் நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இருதரப்புக்கும் இடையேயான உறவு, எந்தவிதமான முரண்பாடுகளின்றி இயல்பானதாக உள்ளது.
நான் பிரதமராக பொறுப்பேற்று 6 மாதங்களாகின்றன. இந்த கால கட்டத்தில் கிழக்காசிய நாடுகளுடனான நட்பை நாங்கள் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவின் கிழக்கை நோக்கி என்ற கொள்கை, தற்போது கிழக்கில் (நாடுகளில்) செயல்படுதல் என்ற புதிய கொள்கையாக மாறி யுள்ளது.
பொருளாதார மேம்பாடு, தொழில் மயம், வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியா வில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. ஆனால், இதைவிட அதிகளவு சாதிக்கும் திறன் நமக்கு உள்ளது. பொருளாதார மேம்பாடு, வளர்ச்சிப் பாதையில் எங்களுடன் இணைந்து நீங்கள் செயல்பட வேண்டும். இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
உலக அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் ஆசியான் அமைப்பின் கருத்தை மற்ற நாடுகள் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டும் அளவுக்கு இந்த அமைப்பு தனி அடையாளத்தைப் பெற்றுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடனும், ஒத்துழைப்புடனும் செயல்பட ஆர்வமாக உள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தாய்லாந்து பிரதமருடன் சந்திப்பு
பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயூத் சான் ஓஜா, மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தை பாராட்டினார். இதே போன்ற திட்டத்தை தனது நாட்டில் கொண்டு வரப்போவதாகவும் பிரயூத் கூறினார்.
பொருளதார மேம்பாடு தொடர்பாக இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட வாய்ப்புள்ளதாக பிரயூத்திடம் மோடி தெரிவித்தார். தாய்லாந்துக்கு வருகை தருமாறு மோடிக்கு பிரயூத் அழைப்பு விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT