Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM
கடந்த 5 மாதங்களாக ஆப்பிரிக்காவில் உள்ள டோகோ நாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த இந்திய கப்பல் மாலுமி சுனீல் ஜேம்ஸ், விடுதலையாகி மும்பையில் உள்ள வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தார்.
சிறையில் இருந்தபோது உயிரிழந்த தனது குழந்தையின் இறுதிச்சடங்குக்கு குடும்பத்தார் ஏற்பாடு செய்துவரும் நிலையில் அவர் வீடு வந்து சேர்ந்தபோதிலும் சோகத்திலிருந்து யாரும் விடுபட வில்லை.
டிசம்பர் 2ம் தேதி ஜேம்ஸின் 11 மாத குழந்தை உயிரிழந்ததை எடுத்துச்சொல்லி இறுதிச்சடங்கு செய்வதற்காக மனிதாபிமான நோக்கில் அவரை விடுவித்து உதவும்படி டோகா நாட்டின் அதிகாரிகளை வலியுறுத்தியது இந்தியா.
‘கடந்துபோன 5 மாதம் திரும்பிவரப் போவதில்லை. தந்தை என்ற முறையில் எனது பணிகளை முடிக்க வந்துள்ளேன்’ என்று நிருபர்களிடம் மும்பை விமான நிலையத்தில் ஜேம்ஸ் தெரிவி்த்தார்.
சிறையிலிருந்து விடுதலை பெற உதவிய பிரதமர் மன்மோகன் சிங், அவரது அலுவலகம், அக்ராவில் உள்ள இந்திய தூதரகம், காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் ஆகியோருக்கு நன்றி தெரிவி்த்துக் கொள்கிறேன் என்றார் ஜேம்ஸ்.
மார்ஷல் தீவுகளின் வணிகக் கப்பலான எம்டி ஓஷன் செஞ்சூரியன் கப்பலின் கேப்டன் ஜேம்ஸ். இந்த கப்பலை கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே உள்ள லாகோஸ் பகுதியில் கடற்கொள்ளையர்கள் தாக்கி, சூறையாடினர். கொள்ளை சம்பவம் பற்றி புகார் கொடுக்கச்சென்றபோது, கொள்ளையர்களுக்கு உதவி புரிந்ததாக டோகோ நாட்டின் தலைநகர் லோமில் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார்.
ஜேம்ஸ் சிறையில் இருந்தபோது, அவரது 11 மாத குழந்தை விவான், டிசம்பர் 2ல் உயிரிழந்தான். தந்தை வந்து இறுதிச் சடங்கு நடத்தவேண்டும் என்பதற்காக குடும்பத்தார், குழந்தையின் உடலை பிரேத அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT