Published : 25 Sep 2016 03:22 PM
Last Updated : 25 Sep 2016 03:22 PM
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்தபோன மாட்டின் உடலை அப்புறப்படுத்த மறுத்து தலித் பெண்ணை கர்ப்பிணி என்றுகூட பாராமல் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "குஜராத் மாநிலம் வடக்கு பகுதியில் பலன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா ரானாவாசியா. இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் இவரது கணவரும் நடாவர்ஷின் என்பவரது நிலத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இநிலையில் நடாவர்ஷுக்கு சொந்தமான மாடு ஒன்று இறந்துபோனது. இறந்துபோன அந்த மாட்டின் சடலத்தை அப்புறப்படுத்துமாறு சங்கீதாவிடம் கூறியுள்ளார். ஆனால் சங்கீதாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அதை மறுத்துவிட்டனர்.
இறந்த விலங்குகளில் சடலங்களை அப்புறப்படுத்தும் தொழிலை கைவிட்டுவிட்டதாக அவர்கள் கூறினர். இதனையடுத்து நடாவர்ஷின் ஆட்கள் சங்கீதாவையும் அவரது குடும்பத்தாரையும் தாக்கியுள்ளனர்.
கர்ப்பிணி என்றுகூட பாராமல் தாக்கப்பட்ட சங்கீதா பாலன்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் சங்கீதாவின் கணவர் ரமேசுக்கும் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை செயலில் ஈடுபட்டது, கலவரத்தை ஏற்படுத்தியது, மிரட்டல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கீதாவின் கணவர் ரமேஷ் 'தி இந்து'- விடம் (ஆங்கிலம்) கூறும்போது, "இறந்துபோன மாட்டின் சடலத்தை அப்புறப்படுத்த மாட்டோம் என நாங்கள் கூறியதால் அவர்கள் எங்களை தாக்கினர். விலங்குகளின் சடலங்களை அகற்றுவது எங்களுக்கே உரித்தான வேலை என வற்புறுத்தினர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT