Published : 15 Mar 2014 02:50 PM
Last Updated : 15 Mar 2014 02:50 PM

தேவயானி விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே மீது அமெரிக்கா 2-வது குற்றச்சாட்டு பதிவு செய்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேவயானி மீது இரண்டாவதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாகவும், அது தேவையற்ற நடவடிக்கை என வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்கா எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்தும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

தேவயானி மீதான வழக்கில் எந்த முகாந்தரமும் இல்லை என மீண்டும் வலியுறுத்துவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2-வது குற்றச்சாட்டு:

தேவயானி மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்த 2 நாட்களிலேயே, மற்றும் ஒரு வழக்கில் தேவயானிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பிரீத் பஹாரா தொடர்ந்துள்ள வழக்கில், தேவயானி தமது வீட்டுப் பணியாளான சங்கீதா ரிச்சர்டு குறித்து பொய்யான தகவல்களைத் தந்து விசா பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருக்கு குறைவான சம்பளம் வழங்கியதாகவும் பிரீத் குற்றம் சாட்டியுள்ளார்.

தேவயானி மீது விசா மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட போது அவர் ஐ.நா.வுக்கான சிறப்பு தூதராக இருந்தார். அதனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். ஆனால் தற்போது தேவயானி இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x