Published : 28 Oct 2013 10:42 PM
Last Updated : 28 Oct 2013 10:42 PM
நரேந்திர மோடி பொதுக்கூட்டத்துக்கு பீகார் மாநில அரசு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும், உளவுத் துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
அதேநேரத்தில், மத்திய உளவு அமைப்பிடம் இருந்து எந்த எச்சரிக்கையும் முன்கூட்டியே வரவில்லை என்று பிகார் மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
குற்றச்சாட்டுகளை அடுக்கும் அருண் ஜெட்லி
பிகார் தலைநகரான பாட்னாவில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று திங்கள்கிழமை பாஜக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, "இது நரேந்திர மோடி மற்றும் இதர மூத்த பாஜக தலைவர்கள் மீதான தாக்குதல். நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
மோடி கூட்டத்துக்கான பாதுகாப்பு விஷயத்தில் பிகார் அரசு அலட்சியம் காட்டியதாகக் குற்றம்சாட்டிய அவர், சில மாநில அரசுகள் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் மென்மையானப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் கூறினார்.
மேலும், மத்திய உளவு அமைப்பில் இருந்து 23 ஆம் தேதியே பிகார் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டும், மாநில அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற அவர், மோடிக்கு வேண்டுமென்றே உரிய பாதுகாப்பை நிதிஷ் குமார் அரசு தரவில்லை என மறைமுகமாகக் குறிப்பிட்டார் ஜெட்லி.
ராஜ்நாத் சிங் குற்றசாட்டு
தொடர் குண்டுவெடிப்பு குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறும்போது, "பாட்னாவில் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்துக்கு பீகார் மாநில அரசு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை. பாதுகாப்பு குறைபாடே குண்டுவெடிப்புக்கு காரணம்" என்றார்.
மேலும், "பிகாரில் தீவிரவாத நடவடிக்கைகள் இருப்பதால்தான், பாட்னாவில் இந்தச் சம்பவம் நடந்தது என்று நம்புகிறேன்" என்றார் அவர்.
"மோடியைக் குறிவைத்தே தாக்குதல்"
இதனிடையே, பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை குறிவைத்தே இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக, பிகாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார். பாஜக தலைவர்கள் இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் குண்டு வெடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட அறிக்கையில், "பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. மேலும் ராகுல் காந்தியை அவர் விமர்சித்து வருவதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அவருக்கு ஆபத்து உள்ளது. எனவே, மோடிக்கு சிறப்பு கமாண்டோ படை (எஸ்பிஜி) பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
நாடு தழுவிய பிரச்சாரத் திட்டம்
பாட்னா தொடர் குண்டுவெடிப்பை மேற்கோள்காட்டி, நாடு தழுவிய அளவில் பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு மாநிலத் தலைநகரங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள அக்கட்சி, பல்வேறு மாநில அரசுகள் பாதுகாப்பு விஷயத்தில் வேண்டுமென்றே அலட்சியமாக இருக்கிறது என்றும், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மென்மையானப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் மக்களுக்குச் சொல்ல முடிவு செய்துள்ளது.
இதற்காக, அனைத்து முக்கிய நகரங்களிலும் பாஜக தலைவர்கள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, பாட்னாவில் மோடி கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்து விளக்கம் அளிக்கவுள்ளது.
பாட்னா, ஹைதராபாத், ராய்ப்பூர், சண்டிகர், சம்பா, பெங்களூர், போபால், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், லக்னோ, கோல்கத்தா, புவனேசுவரம், அகமதாபாத் மற்றும் குவகாத்தி ஆகிய நகரங்களில் இது தொடர்பாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
(செய்தித் தொகுப்பு: பி.டி.ஐ., ஐ.ஏ.என்.எஸ்.)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT