Published : 06 Feb 2014 11:46 AM
Last Updated : 06 Feb 2014 11:46 AM
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளையொட்டி தெரு மின்விளக்குகள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தற்போதைய அர்விந்த் கேஜ்ரிவால் அரசு வியாழக்கிழமை பரிந்துரைத்தது. இதை டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறுகையில், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளுக்காக தெருவிளக்குகள் வாங்கியதில் டெல்லி அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் மீது சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு எழுதப்பட்டுள்ளது” என்றார்.
ஷீலா மீது கேஜ்ரிவால் பரிந்துரைத்துள்ள இரண்டாவது விசாரணை இதுவாகும். தேர்தல் ஆதாயம் பெறுவதற்காக, சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்ட சுமார் ஆயிரம் காலனிகளை 2008-ல் அப்போதைய முதல்வர் ஷீலா அங்கீகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மீதான விசாரணைக்கு அனுமதி கேட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கேஜ்ரிவால் கடந்த திங்கள்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இந்த விஷயத்தில் ஷீலா மீது விசாரணை நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி கேஜ்ரிவால் விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதனை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா வரவேற்றுள்ளது.
இது பற்றி அதன் மூத்த தலைவர் பங்கஜ் குப்தா கூறுகையில், “விசாரணைக்கு எங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆம் ஆத்மியும் இதை செய்வதாக கூறி செய்யாமல் இருந்தது. தற்போது தாமதமாக செய்தாலும் இதை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.
டெல்லியில் காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2001 டிசம்பர் 3 முதல் 14-ம் தேதி வரை நடந்தது. இதில் ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க வி.கே.சுங்லு தலைமையில் உயர்நிலை விசாரணை குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். .
இக்குழு, தெருவிளக்குகள் பொருத்துவதில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தனது அறிக்கையில் கூறியதாக தகவல் வெளியானது. இதன் முடிவுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட போது, இது அந்த சட்ட வரம்புக்குள் வராது என்றும், அந்த அறிக்கை மத்திய அமைச்சர்கள் குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பதில் கிடைத்தது.
இந்த விளையாட்டில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ 19 வழக்குகள் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தது. இதில், காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாதி உள்பட பலரும் கைதானார்கள். இதில் 9 வழக்குகளில் முறையான ஆதாரங்கள் இல்லை என வழக்குகளை சிபிஐ முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷீலா அரசு மீதான வழக்கு குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் முகேஷ் குப்தா கூறுகையில், “எந்தவொரு விஷயத்தையும் கேஜ்ரிவால் தேர்தலை மனதில் வைத்து செய்கிறார். அந்த வகையிலான இந்த விசாரணையையும் காங்கிரஸ் சந்திக்க தயாராக இருக்கிறது” என்றார்.
2008-ல் ஷீலா முதல்வராக இருந்தபோது, பொது நிதியான ரூ.11 கோடியை தனது சுய விளம்பரத்துக்கு பயன்படுத்தியதாக பாஜக டெல்லி மாநிலத் தலைவர் விஜயேந்தர் குப்தா வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் ஷீலா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதற்கு தடை விதிக்க கோரி முந்தைய ஷீலா அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறவும் கேஜ்ரிவால் அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளுக்காக தெருவிளக்குகள் வாங்கியதில் டெல்லி அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT