Published : 14 Sep 2016 05:28 PM
Last Updated : 14 Sep 2016 05:28 PM

சிக்குன்குனியாவுக்கு பலியான மனைவியின் உடலுடன் அலைந்த டெல்லி தேநீர் வியாபாரி

கிழக்கு டெல்லியைச் சேர்ந்த சோட்டே லால் என்ற தேநீர் விற்பனையாளர் சிக்குன்குனியாவுக்கு பறிகொடுத்த தனது மனைவியின் உடலை இருத்த இடமில்லாமல் 4 மணிநேரம் அலைந்துள்ளார்.

சோட்டேலாலின் மனைவி அஞ்சு (35), உடல்வலி மற்றும் கடும் காய்ச்சல் காரணமாக அவதியுற்றார், இவரை கணவர் சோட்டே லால் ஹெட்கேவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

“திங்களிரவு 9 மணிக்கு என் மனைவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை வாகன வசதி அளிக்காது என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரூ.300 ரூபாய்க்கு கர்கர்டூமா கிராமத்தில் என் வீட்டில் இறக்கி விட சம்மதித்தார். நான் என்னிடம் ரூ.200 தான் இருக்கிறது என்று கூறியதற்கு ஓட்டுநரும் ஒப்புக் கொண்டார்” என்றார்.

ஆனால் 3-வது மாடியில் இருக்கும் தனது வாடகை குடியிருப்புக்கு மனைவியின் உடலை எடுத்துச் செல்ல முடியாது என்பதால் தரைத்தளத்தில் உள்ள வீட்டுக்காரரின் வீட்டிலோ அல்லது அண்டை வீட்டிலோ மனைவியின் உடலை வைக்கக் கெஞ்சிக் கூத்தாடியுள்ளார்.

ஆனால் ஒருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. வீட்டுக்காரர் அருகில் கோயிலும் கிணறும் இருப்பதால் உடலை வீட்டில் வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்துள்ளார். மேலும் வீட்டுக்காரர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடமே இதற்கு தீர்வு காணுமாறு சோட்டேலாலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடலை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகவும் உடலைப் புதைக்கவும் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார், ஆனால் ரூ.2,000 கேட்டார். ஆனால் என்னிடம் பணம் இல்லை, இந்நிலையில் வீட்டுக்காரர் தேவேந்திரா பணத்தை கொடுக்க மருத்துவமனைக்கு மீண்டும் உடலுடன் புறப்பட்டோம்.

ஆனால் மருத்துவமனை செக்யூரிட்டி உள்ளே நுழைய அனுமதி மறுத்ததோடு கடும் வசைச்சொற்களையும் பயன்படுத்தினார். எங்களை திட்டி விரட்டி விட்டார்.

இதனையடுத்து கிராஸ் ரிவர் மாலுக்கு அருகேயுள்ள தனது டீக்கடைக்கு உடலை எடுத்துச் செல்ல முடிவெடுத்தார் லால். அங்கு சென்ற போது ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்ன நடந்தது என்று விசாரித்து தனது மேலதிகாரிகளுக்கு நிலைமைகளை எடுத்துரைத்தார். பிறகு அவர்கள் சோட்டேலால் வசித்த கிராமத்தின் தலைவர் பன்வர்லாலை தொடர்பு கொண்டு உடலை பத்திரமாக பாதுகாக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

செவ்வாயன்று அஞ்சுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x