Published : 25 Feb 2014 09:28 AM
Last Updated : 25 Feb 2014 09:28 AM
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் புகுந்த சிறுத்தை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேரை தாக்கி உள்ளது. இதன் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கிய மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளித்தது.
டெல்லியிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள மீரட் நகரில் மரக்கடை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென புகுந்த ஒரு சிறுத்தை அதன் உரிமையாளர் கவுரவை தாக்கியது. அதனிடமிருந்து தப்பிய அவர் கழிவறையில் புகுந்து கதவை சாத்திக் கொண்டார்.
அங்கிருந்து தப்பிய சிறுத்தை, முக்கிய கடைவீதியில் ஓடியபோது நான்கு பேரை தாக்கியது. பிறகு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்தது. இதனால் உள்ளே இருந்த ஊழியர்களும் நோயாளிகளும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.
இதை அறிந்த ராணுவத்தினர் மருத்துவமனையின் வாயில்களை அடைத்து அதைச் சுற்றி வளைத் தனர். இவர்களுடன் உபி போலீசின் பி.ஏ.சி. எனும் அதிரடிப் படையும் சேர்ந்து அதைப் பிடிக்க முயன்றனர். அப்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டரை சிறுத்தை தாக்கியது. சுமார் 12 மணி நேரம் மருத்துவமனையிலேயே இருந்த சிறுத்தையை இரண்டுமுறை துப்பாக்கியால் மயக்க ஊசி போட்டு சுட்டுப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. அங்கிருந்தும் தப்பி ஓடி விட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், மாவட்ட நிர் வாகம் பாதுகாப்பு கருதி மீரட் நகரின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவித்தது. இது குறித்து மீரட் துணை ஆட்சியர்களில் ஒருவர் தி இந்துவிடம் கூறுகையில், "இதுவரை ஆறு பேரை தாக்கிய சிறுத்தை தப்பி ஓடி விட்டது. இதில் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. எனினும், இதனிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடிய ஒருவர் ஓடும் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டார்" என்றார். அதிரடிப்படை போலீசார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் உள்பட 70 பேர் கொண்ட குழு தேடும் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளபோதிலும் சிறுத்தை கிடைக்கவில்லை. சிறுத்தையை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதுபற்றி 'தி இந்து'விடம் மீரட் அருகிலுள்ள காஸ்கஞ்ச் மாவட்ட வன அதிகாரி ஆர்.பாலச்சந்திரன் ஐ.எப்.எஸ். கூறுகையில், "இந்த சிறுத்தை உத்தரகண்ட் மாநிலத்தின் சஹாரன்பூர் காடுகள் வழியாக மீரட் வந்திருக்கிறது. விலங்குகளின் வாழ்விடங்களில் ஏற்படும் பிரச்சினை மற்றும் உணவுப் பற்றாக்குறையே இதற்குக் காரணம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT