Published : 05 Nov 2013 08:39 AM
Last Updated : 05 Nov 2013 08:39 AM

‘மங்கள்யான்’ திட்டம் வீண் செலவா?- கே.ராதாகிருஷ்ணன் விளக்கம்

இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அங்கு தயார்நிலையில் உள்ளன. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் இந்த விண்கலம் அங்கு மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். அதோடு அங்குள்ள தாதுவளங்களையும் கண்டறியும். 1,350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலத்தில் அதற்கான அதிநவீன கருவிகளும், கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் மங்கள்யான் விண்கலம் புவிவட்டப் பாதையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும். அதன்பிறகு புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரக பாதைக்கு செலுத்தப்படும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் அதைச் சுற்றிவந்து ஆய்வுசெய்யும்.

ஆய்வு வீண் செலவா?

இதற்கிடையில், செவ்வாய் கிரக ஆய்வு பற்றி இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: “இன்றைய சூழலில் ரூ.450 கோடி மதிப்பில் இத்திட்டம் தேவைதானா? இது வீண் செலவு. நாங்களும் செவ்வாய் கிரக ஆய்வில் ஈடுபடப் போகிறோம் என்ற வெற்றுப் பெருமிதத்துக்காக செய்யப்படுகிறது” என்ற விமர்சனங்கள் எழுகின்றன. நிலவு, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்களை ஆய்வு செய்வதற்கான விண்வெளி ஆய்வுத் திட்டங்கள், தேசத்தின் தொலைநோக்கு விண்வெளி ஆய்வுத் திட்டங்களின் ஓர் அங்கம்.

இத்திட்டங்கள் விண்வெளி அறிவியல் துறை ஆலோசனைக் குழுவால் திட்ட மிடப்பட்டவை. இதுபோன்ற திட்டங்களை தவிர்க்க முடியாது. நாம் மூன்று நீண்டகால விண்வெளித் திட்டங்களை வைத்துள் ளோம். செயற்கைக்கோள்கள், ஏவுகலங்கள், கிரகங்களின் ஆய்வு களில் ஈடுபடுதல் என அவற்றை வரிசைப்படுத்தி மேற்கொண்டு வருகிறோம். நம் கைகளில் உள்ள விரல்களைப் போல அனைத்துமே சமமான முக்கியத்துவம் கொண் டவை.

அனைத்து விரல்களும் நமக்குத் தேவைதான். சந்திரயான், அஸ்ட்ரோசாட் திட்டங்களைப் போன்று செவ்வாய்க்கிரக சுற்றுப்பாதைத் திட்டம் (எம்ஓஎம்) என்பது கிரக ஆய்வுகளில் ஈடுபடும் திட்டத்தின் ஒரு பகுதி. இஸ்ரோ பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 7 சதவீத நிதி, சூரியக்குடும்பத்தைப் பற்றிய நமது அறிவின் எல்லையை விரிவுபடுத்துவதற்காகச் செல விடப்படுகிறது.

இது போன்ற திட்டங்கள் நமது தொழில்நுட்ப நிபுணர்களுக்குச் சவாலானவை. இத்திட்டத்தின் விளைவுகள் வேறு துறைகளிலும் பயன்படக்கூடும்’’ என்று ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x