Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM
நாடாளுமன்றத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு டெல்லி மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து டெல்லி அரசின் சட்டத்துறை வட்டாரங்கள் “தி இந்து”விடம் கூறுகையில், “இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் உள்ளன. மேல்முறையீட்டில் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். எனவே, இதை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளோம்” என்றனர்.
அமெரிக்காவுடன், அணுசக்தி ஒப்பந்தம் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகக் கூறி, மக்களவையில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை பாஜக எம்.பி.க்கள் காட்டினர்.
இதன் மீது வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீஸார், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமர்சிங், அத்வானியின் முன்னாள் உதவியாளரும் பாஜக தலைவருமான சுதீந்திர குல்கர்னி, பாஜக எம்.பி. அசோக் அர்கால் மற்றும் இரு முன்னாள் எம்.பி.க்கள் பாகன் சிங், மஹாவீர் பகோரா உள்பட பலரை கைது செய்தனர். இவ்வழக்கு நகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன் தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
லஞ்ச விவகாரம் குறித்து விசாரணைக்கு அமர்த்தப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் யார் மீதும் தவறு இல்லை எனக் கூறிவிட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வந்தபோது டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தற்போது ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முயன்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT