Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM
உ.பி.யின் வாரணாசியில் மோடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்க்க நினைக்கும் கிரிமினல் வேட்பாளரான முக்தார் அன்சாரிக்கு ஆதரவளிக்க முலாயம் சிங் திட்டமிடுகிறார்.
உ.பி.யின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலின் முன்னணியில் இருப்பவர் அன்சாரி. முதலில் முலாயம் சிங் பிறகு மாயாவதியின் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெல்லும் அளவுக்கு செல்வாக்கு படைத்த அன்சாரியை கட்சியிலிருந்து மாயாவதி நீக்கினார். இதனால், கௌமி ஏக்தா தளம் என்ற பெயரில் ஒரு கட்சியை துவக்கி, கடந்த 2009 தேர்தலில், முரளி மனோகர் ஜோஷிக்கு எதிராக போட்டியிட்டார் அன்சாரி.
ஜோஷிக்கு அடுத்தபடியாக 17211 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பெற்ற அன்சாரி, இதே செல்வாக்கை பயன்படுத்தி 2012-ல் உ.பி. எம்.எல்.ஏவானார்.
இதனால் இந்தமுறை ஜோஷியை எதிர்த்து தன் மனைவி அப்ஷான் பேகம் அன்சாரியை வாரணாசியின் வேட்பாளராக அறிவித்துள்ளார். இங்கு மோடியை பாஜக அறிவித்தால் தானே அவரை எதிர்க்க முடிவு செய்திருந்தார். இவர் தற்போது பாஜக தலைவர் கிருஷ்ணாராய் கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார்.
இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர்கள் வட்டாரம் தி இந்துவிடம் கூறுகையில், `‘இங் குள்ள சுமார் மூன்று லட்சம் முஸ்லிம் வாக்காளர்களில் பெரும்பாலானோரின் ஆதரவு அன்சாரிக்கு இருப்பதால், அவரால்தான் மோடிக்கு சரியாக பதிலடி தர முடியும் என முலாயம் கருதுகிறார். எங்கள் கட்சிக்கும் முஸ்லீம் ஆதரவு இருப்பதால் அவர்களின் வாக்குகள் வாரணாசியில் பிரிந்து, மோடியின் வெற்றி எளிதாகி விடக்கூடாது என எண்ணுகிறோம்’’ எனக் கூறுகின்றனர்.
இதற்காக முக்தார் அன்சாரியை தன் கட்சிக்கு இழுக்கவும் முலாயம் தயாராக இருக்கிறார் எனவும் அல்லது வாரணாசியின் சமாஜ்வாதி வேட்பாளரை வாபஸ் பெறவும் முலாயம் யோசனை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வாரணாசியில் சமாஜ்வாதியில் உ.பி. கல்வி அமைச்சரான கைலாஷ் சௌரசியாவும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய முகமாக விஜய் ஜெய்ஸ்வால் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட் டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT