Published : 27 Oct 2013 09:52 AM Last Updated : 27 Oct 2013 09:52 AM
பிரதமர் மீது நடவடிக்கை எடுக்காமல் சிபிஐ மவுனம் காப்பது ஏன்?- மோடி கேள்வி
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் மீது நடவடிக்கை எடுக்காமல் சிபிஐ மவுனம் காப்பது ஏன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில உதய்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் மீது முன்னாள் மூத்த அரசு அதிகாரி ஒருவர் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார். இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் மீது அடுக்கடுக்கான குற்ற ச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. ஆனால் சிபிஐ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
என் மீதோ, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், ராஜஸ்தான் மாநில பாஜக முதல்வர் வேட்பாளர் வசுந்தரா ராஜே மீதோ இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தால் அடுத்த சில நொடிகளில் சிறையில் தள்ளியிருப்பார்கள். ஆனால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் பிரதமர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாம்பை கண்டு பயத்தில் உறைந்த நபர் போல் சிபிஐ மெளனத்தில் அப்படியே உறைந்துவிட்டது.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளன. தேர்தலுக்கு முந்தைய 200 நாள்களில் இருந்து மத்திய அரசின் அனைத்து முறைகேடுகளையும் அம்பல ப்படுத்துவேன். இளவரசர் ராகுல் காந்தி என்ன பேசுகிறார் என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கே புரியவில்லை. ஏன் அவருக்கேகூட புரியவில்லை. அவருக்காக உரை தயாரித்துக் கொடுக்கும் எழுத்தாளருக்கு சுத்தமாகப் புரியவில்லை. எல்லோருமே குழப்பத்தில் இருக்கிறார்கள். அண்மைக்காலமாக அவரது உணர்ச்சிப்பூர்வமான பேச்சு கள் அனைத்தும் டி.வி. சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது.
மதச்சார்பின்மை குறித்து ராகுல் வகுப்புகள் நடத்துகிறார். உத்தர பிரதேசம் முஷாபர்நகர் முகாம்களில் உள்ள சில இளைஞர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று அவர் கூறுகிறார். அந்த இளைஞர்களின் பெயர்களை ராகுல் வெளியிடுவாரா? ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் போலீஸ் அதிகாரி ஒருவர் அண்மையில் ராகுலை சந்தித்துள்ளார். அவர் ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்தக் கதையைதான் ராகுல் நமக்கு விவரித்திருக்கிறார்.
காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்தான் வெங்காயம் அதிகம் விளைகிறது. ஆனால் அந்த அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்காததால் வெங்காயம் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது என்று மோடி பேசினார்.
WRITE A COMMENT