Published : 08 Mar 2014 04:15 PM
Last Updated : 08 Mar 2014 04:15 PM

டெல்லியில் மற்றொரு மை வீச்சு தாக்குல்: ஆம் ஆத்மி தலைவருக்கு அவமரியதை

புது டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் யோகேந்திர யாதவின் முகத்தின் மீது மை பூசப்பட்டது.

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் ஷாலிமர் பாக் பகுதியைச் சேர்ந்த சாகர் பண்டாரி (28) என்பவர் ஆம் ஆத்மி கட்சியினர் அணியும் தொப்பி, பேட்ஜுடன் நின்று கொண்டிருந்தார். ‘பாரத மாதா வாழ்க’ என்று கோஷமிட்டபடி இருந்த பண்டாரி, திடீரென யோகந்திர யாதவின் பின்புறத்தில் இருந்து வந்து அவரின் முகத்தில் மை பூசினார்.

அவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் நாடாளுமன்றத் தெரு காவல் நிலைய போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். லேசான காயமடைந்திருந்த பண்டாரி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

சாகர் பண்டாரி, ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருந்து அதிருப்தி காரணமாக விலகியவர் என கூறப்படுகிறது. ஆனால், அவர் பாஜகவை சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ஷஜியா இல்மி கூறினார். இதை மறுத்துள்ள டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன், “இந்த சம்பவத்துக்கும் பஜாகவுக்கும் தொடர்பு இல்லை. இதை ஆம் ஆத்மி கட்சியனரே திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர்” என்றார்.

முகத்தில் மை பூசப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்த யோகேந்திர யாதவ், “என் மீது மை பூசிய நபரை இதற்கு முன்பு எனக்கு தெரியாது. பத்திரிகையாளர் களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென எனது முகத்தில் மை பூசினார். எங்களின் அரசியல் எதிரிகள் இப்போது முதுகுப் பக்கம் இருந்து கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடுத்த முறை முன் பக்கமாக வந்து தாக்குதல் நடத்துவார்கள்.

அரசியலில் ஈடுபட்டு மிகப்பெரிய சக்திகளுக்கு எதிராக போராடும்போது, இதுபோன்ற விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதற்காக நான் வெட்கப் படவில்லை” என்றார்.

இந்த சம்பவம் குறித்து அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “நேர்மையான பாதையில் செல்வோர் மீது இதுபோன்றுதான் அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள்” என்றார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சஹாரா குழும நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் மீது மை வீச்சு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x