Published : 27 Jan 2014 01:09 PM
Last Updated : 27 Jan 2014 01:09 PM
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி, கட்சிக்குள் தன்னைப் போல அதிருப்தியுடன் இருப்பவர்களை அடக்கி வைக்கவே தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு மீது சரமாரியாக குற்றம்சாட்டிய அதிருப்தி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னியை, ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக் கிழமை அதிரடியாக நீக்கியது.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத்குமார் பின்னி, இன்று டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்தார்.
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பின்னி: அரவிந்த் கேஜ்ரிவால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். துணை நிலை ஆளுநரிடம் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தான் கோரியதாகவும், அதற்கு துணை நிலை ஆளுநர் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.
கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து முறையாக தமக்கு கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாகவே தான் அதை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்பதே லட்சியம் என்று கூறும் ஆம் ஆத்மி கட்சி இதுவரை டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு கமாண்டோப் படைகள் அமைக்கப்படும் என கூறப்பட்டது ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
கேஜ்ரிவால் மறுப்பு: ஆம் ஆத்மி கட்சிக்குள் தன்னைப் போல் நிறைய அதிருப்தியாளர்கள் இருப்பதாக பின்னி கூறியுள்ளதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்றும் எப்போதும் நினைத்ததில்லை, எங்கள் இலக்கு மக்களுக்கு தொண்டாற்றுவது மட்டுமே என்றார்.
ஆம் ஆத்மி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து பின்னி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT