Last Updated : 07 Nov, 2014 08:42 AM

 

Published : 07 Nov 2014 08:42 AM
Last Updated : 07 Nov 2014 08:42 AM

இன்போசிஸ் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்றது: 100 ஏக்கர் நிலம்.. தடையில்லா மின்சாரம்..

கர்நாடக மாநிலத்தில் இன்போசிஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான வசதிகள் உடனடியாக செய்து தரப்படும். ஆதலால் எந்த நிறுவனமும் கர்நாடகாவை விட்டு செல்ல வேண்டாம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை உறுதி அளித்தார்.

இன்போசிஸ் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் புதிதாக கிளை தொடங்க இன்போசிஸ் திட்டமிட்டது. இதற்கு தேவையான வசதிகளை செய்து தர கர்நாடக அரசு மறுத்து விட்டதால், ஆந்திராவிற்கு இடம்பெயர போவதாக‌ தகவல் வெளியானது.

சந்திரபாபு அழைப்பு

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூரு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில் துறை நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளும், சலுகைகளும் செய்து தரப்படும். ஆந்திராவை சர்வதேச அளவில் முதல் மாநிலமாக மாற்ற, அனை வரும் கைகோர்ப்போம்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இயங்கி வரும் இன்போசிஸ் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும், வடகர்நாடகத்தில் தொழிற்சாலை தொடங்க முன்வந்த ஹோண்டா, ஹுண்டாய் ஆகிய நிறுவனங்களை ஆந்திராவிற்கு செல்ல போவ‌தாக தகவல் வெளியானது.

சகலமும் செய்து தரப்படும்

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் ஆகியோர் வியாழக்கிழமை பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசினர். அப்போது சித்தராமையா பேசும் போது, “கர்நாடகத்தில் தகவல் தொழில்நுட்ப, தொழில்துறை நிறுவனங்க‌ளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர அரசு தயாராக உள்ளது. தேவைப்பட்டால் சலுகைகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். எனவே எந்த நிறுவனமும் ஆந்திராவுக்கு செல்ல கூடாது.

இன்போசிஸ் நிறுனத்தின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு மிக அருகில் 100 ஏக்கர் நிலம், 24 மணி நேர தடையில்லா மின்சாரம், இலவச குடிநீர் விநியோகம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர முடிவெடுத்துள்ளோம். அதே போல சில தொழில்நுட்ப நிறு வனங்களுக்கும், தொழிற்சாலை களுக்கும் வட கர்நாடகத்தில் பல வசதிகளை செய்து தரப்படும்'' என உறுதி அளித்தார்.

கர்நாடக அரசின் முடிவை ஏற்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் பெங்களூருவிலேயே இயங்க திட்டமிடுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x