Last Updated : 23 Jul, 2016 10:55 AM

 

Published : 23 Jul 2016 10:55 AM
Last Updated : 23 Jul 2016 10:55 AM

ஆப்கனில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் மீட்பு: சுஷ்மா தகவல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் தொண்டு ஊழியர் ஜூடித் டிசோஸா பத்திரமாக மீட்கப்பட்டார்.

கடந்த மாதம் 10-ம் தேதி ஜூடித் கடத்தப்பட்ட நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டதை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அதிகாலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜூடித் டிசோஸா மீட்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மீட்கப்பட்ட ஜூடித் காபூலில் இந்திய தூதரகத்தில் இருப்பதாகவும் அவர் விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தினர் நன்றி:

ஜூடித் மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவரது சகோதரர் ஜெரோம் டிசோஸா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்தப் பேட்டியில், "எனது சகோதரி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திய அரசுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் விடாமுயற்சியின் காரணமாகவே ஜூடித் மீட்கப்பட்டுள்ளார்" என்றார்.

ஜூடித்தின் தந்தை டென்ஸல், தாயார் லாரன்ஸ், சகோதரி ஆக்னஸ் ஆகியோரும் மகிழ்ச்சியும் இந்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

ஜுடித் கடந்த ஓராண்டாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஆகா கான் அறக்கட்டளையில் பணியாற்றி வந்தார். இதற்கு முன் பல்வேறு தன்னார்வ அமைப்புகளில் கொல்கத்தா மற்றும் டெல்லியில் பணியாற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இந்திய தொண்டு ஊழியர் கடத்திச் செல்லப்பட்டது இது முதல்முறை அல்ல. இங்கு பெரும்பாலும் தலிபான் அமைப்பினரே ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

ஆப்கானிஸ்தானை புனரமைக்க இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ள நிலையில், இந்திய அமைப்புகள் கடந்த காலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x