Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தலின்போது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
முக்கியமாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இந்த தீவிரவாதிகள் குறிவைத்துள்ளனர்.
டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு இவர்களை கைது செய்துள்ளது. இவர்களில் ஷியா உர் ரஹ்மான் என்ற வகாஸ், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய கமாண்டர் ஆவார். மேலும் இருவர் ராஜஸ்தானில் இன்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்கள். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சில வெடி பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்
24 வயதாகும் வகாஸ் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். 2010-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார். எலக்ட்ரிக் சர்க்யூட் மற்றும் ஐஇடி வகை வெடிகுண்டுகளை தயாரிப்பதில் கைதேர்ந்த இவருக்கு, 2010-ம் ஆண்டு நிகழ்ந்த ஜம்மா மசூதி துப்பாக்கிச் சூடு சம்பவம், வாரணாசி குண்டு வெடிப்பு, 2011-ல் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, 2012 புணே குண்டு வெடிப்பு, 2013 ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு ஆகியவற்றில் தொடர்பு உண்டு.
அஜ்மீர் ரயில் நிலையத்துக்கு வெளியே வகாஸ் கைது செய்யப்பட்டார். மும்பையில் இருந்து ரயில் மூலம் அவர் அஜ்மீர் வந்துள்ளார்.
மோடியை குறிவைத்து..
மக்களவைத் தேர்தலின்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த இந்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குறிவைத்து குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் இவர்கள் சதி செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஜெய்சால்மர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்கள், ராயல் ரயில் ஆகியவற்றில் குண்டு வைக்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லி போலீஸார் ராஜஸ்தா னின் வெவ்வேறு நகரங்களில் சனிக்கிழமை முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜோத்பூரில் தீவிரவாதி ஷாகிப் அன்சாரி என்ற காலித்(25) கைது செய்யப் பட்டார். அவருடன் இருந்த மற்றொருவர் தப்பியோடிவிட்டார். பிரதாப் நகரில் நடத்தப்பட்ட சோதனையில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இன்ஜினீயரிங் மாணவர்களான அவர்களிடம் இருந்து வெடி பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களது பெயர் முகமது மஹரூப் (21), முகமது வக்கார் அன்சார் என்ற ஹனீப் (21) என்று விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்க ளிடம் இருந்து கிடைக்கும் தகவல் கள் மூலம் மேலும் தீவிரவாதிகள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT