Published : 17 Dec 2013 12:30 PM
Last Updated : 17 Dec 2013 12:30 PM

இடுக்கி: பத்து வருடத்தில் ஆயிரம் பேருக்கு கர்ப்பப் பை அகற்றம்! - தேயிலை தோட்ட தொழிலாளர்களின் அவலம்


இடுக்கி தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களில் ஆயிரம் பேருக்கு மேல் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு, அகற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது!

கேரளத்தின் தேயிலை உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு இடுக்கி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவிகுளம் தாலுக்காவில் மட்டும் 55 ஆயிரம் ஹெக்டேரில் தேயிலை தோட்டங்கள் பட்டுக் கம்பளிபோல் பரவிக் கிடக்கின்றன. தற்சமயம் இங்கு சுமார் 7000 தமிழ் பெண்கள் தேயிலை தொழிலில் இருக்கிறார்கள். இவர்களில் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை பளு காரணமாக கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

டாடா இருந்தவரை பிரச்சினை இல்லை

இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்தார் தேயிலை தோட்ட கண்காணிப்பாளரும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கேரள மாநிலச் செயலாளருமான வெள்ளத்துரை பாண்டியன். “மூணாறு பகுதியில் நூறு சதுர கிலோ மீட்டரில் விரிந்து கிடக்கும் தேயிலை தோட் டங்களில் 8 கம்பெனிகளுக்கு சொந்தமான 85 டிவிஷன்கள் இருக்கு. இங்கு வேலை செய்யும் அனைவருமே தமிழர்கள்தான்.

இங்குள்ள தேயிலை கம்பெனிகள் டாடாவின் கையில் இருந்தவரைக்கும் தொழிலாளர்கள் அக்கறையோடு கவனிக்கப்பட்டார்கள். 2005-ல் டாடா விடமிருந்து கை மாறிய பிறகு, நிலைமை ரொம்ப மோசமாகிருச்சு.

இடுப்பில் 20 கிலோவை சுமந்ததால் வந்த ஆபத்து

முன்பெல்லாம் கையால் தான் தேயிலை கொழுந்தை பறிப்பாங்க. ஆனா, 2003-லிருந்து கட்டர் மெஷின் கொண்டு வந்துட்டாங்க.

சுமார் ரெண்டு கிலோ எடை கொண்ட அந்த மெஷினை தூக்கி கொழுந்து வெட்டி வெட்டியே பெண்களுக்கு தோள்பட்டை மூட்டு தேய்ஞ்சு போச்சு. கையால பறிக்கிறப்ப முதுகுல கூடையை கட்டிக்கிட்டு அஞ்சாறு கிலோ தேயிலையை சுமப்பாங்க. அதனால பெரிய பாதிப்பு இல்லை. ஆனா மெஷின் வந்த பின்னாடி, இடுப்புல சாக்கைக் கட்டி 20 கிலோ தேயிலை வரைக்கும் சுமக்க வைக்கிறாங்க. சில தோட்டங்கள்ல தேயிலை கொழுந்தை சுமந்துக்கிட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடக்க வேண்டி இருக்கறதால

பாவம் பெண்கள் வதைபட்டுப் போறாங்க.

இப்படி அதிகப்படியான எடை கொண்ட தேயிலை பைகளை இடுப்புல கட்டி சுமந்ததுலதான் பெண்களுக்கு கர்ப்பபை கீழே இறங்கி அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுப் போச்சு. கடந்த பத்து வருஷத்துல ஆயிரம் பேருக்கு மேல கர்ப்பப் பையை இழந்துட்டாங்க. அத்தனை பேரும் 40-லிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனாலும், குடும்பச் சூழல் வறுமை காரணமா இன்னமும் அவங்க உழைக்கிறாங்க.

நவீன கொத்தடிமைகளாக

தினமும் எட்டு மணி நேரம் வேலை செஞ்சா 204 ரூபாய் சம்பளம். இங்கிருக்கிற சில தொழிற் சங்கங்களுக்கு, தொழிலாளிகளுக்கு சொஸைட்டி மூலமா கந்துவட்டிக்கு கடன் குடுக்குறதுதான் முக்கியமான வேலை. கடனுக்கான தவணையை தேயிலை கம்பெனிகளே நேரடியாக பிடித்தம் செய்து சொஸைட்டிக்கு குடுக்குறாங்க. இப்படி இருந்தா எப்படி தொழிலாளிக்காக நியாயம் கேட்பாங்க?

கடனுக்கு கட்டிய வட்டியும் மொதலும் போக மாசம் 1200 ரூபாய் கூட தொழிலாளி கைக்கு போகாது. அதனால, குடும்பத் தேவைகளை சமாளிக்கிறதுக்காக மறுபடியும் மறுபடியும் சொஸைட்டியில கடனை வாங்கிக்கிட்டே இருக்காங்க. தொடர்ந்து பத்து வருசம் வேலை செஞ்சா அரசாங்கம் 1300 ரூபாய் பென்ஷன் குடுக்கும். இதைச் சொல்லிச் சொல்லித்தான் இந்த அப்பாவித் தொழிலாளிகளை நவீன கொத்தடிமைகளா மாத்தி வச்சிருக்காங்க.

மருத்துவ வசதியும் இல்லை

டாடா நிர்வாகத்தில் இருந்தப்ப, தொழிலாளர் வீட்டு பெண்களுக்கு தலைப் பிரசவம் இலவசமா பார்த்தாங்க. இப்ப 12 ஆயிரம் கட்டணும்னு சொல்றாங்க. தொழிலாளிகளுக்கு வைத்தியம் பாக்குறதுக்காக இங்கே ஆஸ்பத்திரி இருக்கு. ஆனா அங்கிருக்கிற டாக்டருங்க, நோயாளியை தொட்டுக்கூடப் பார்க்க மாட்டாங்க. மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்கிட்டு வர்ற மாதிரித் தான் அவங்கட்ட மருந்து வாங்கிட்டு வரணும். ஒழுங்கானபடிக்கு வைத்தியம் பார்க்காம விட்டுட்டு கடைசி நேரத்துல, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி விட்டுருவாங்க. தேனிக்கு நூறு கிலோ மீட்டர் தூரம் போறதுக்குள்ள பல பேரு பரலோகம் போய் சேர்ந்திருக்காங்க. இதுக்கெல்லாம் எப்பத்தான் விமோசனமோ தெரியல’’ என்று வேதனை குரலை பதிவு செய்தார் வெள்ளத்துரை பாண்டியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x