Published : 01 Mar 2017 02:22 PM
Last Updated : 01 Mar 2017 02:22 PM
இந்த ஆண்டு கோடை காலத்தில் காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களில்கூட கடுமையான வெப்பம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடை காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல மலைப்பிரதேசங்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கோடை காலத்தில் இத்தகைய மலைப்பிரதேசங்களில் வழக்கமான வெப்ப அளவைக் காட்டிலும் 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக பஞ்சாப், டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக வெப்பம் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, இந்த ஆண்டு கோடையில் வழக்கத்தைவிட கூடுதல் வெப்பம் நிலவுவதற்கு 47% சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த நூற்றாண்டின் அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் சராசரி வெப்ப அளவு வழக்கத்தைவிட 1.36 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது. 1901-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அளவு வெயிலின் தாக்கம் இருந்தது இல்லை எனக் கூறும் அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பம் நிலவியது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.ஜெ.ரமேஷ் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்தப் பேட்டியில், "நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் அதிகளவு கோடை வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கிறோம். மற்ற பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சற்று குறைவாக இருக்கலாம். கடந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிபயங்கரமாக வெப்பம் நிலவக் காரணம் கடந்த ஆண்டு குளிர் காலத்தில் சரியான அளவு குளிர் நிலவாததே.
புவி வெப்பமயமாதலையே வானிலை ஆய்வு மையம் இதற்குக் காரணம் காட்டுகிறது. கோடை வெப்பம் தொடர்பான ஆராய்ச்சியில், வெப்பக் காற்றின் தாக்கமும் அது நீடிக்கும் காலமுமே கோடை வெப்பத்தை நிர்ணயிக்கிறது. பசுமைகுடில் வாயுக்களின் போக்கும், இந்திய மற்றும் பசிபிப் பெருங்கடல் பரப்பின் வெப்பம் அதிகரிப்பும் இதற்குக் காரணம்" என்றார்.
இந்த ஆண்டின் மத்திய காலகட்டத்தில் எல் நினோ வலுப்பெறும் என்று வெளிநாட்டு வானிலை ஆய்வு மையங்கள் கணிக்கின்றன. ஆனால், இது குறித்து இப்போதே ஊகிக்க வேண்டிய அவசியமில்லை, அப்படி ஒரு சாத்தியத்தை இப்போதைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கவில்லை என ரமேஷ் தெரிவித்தார்.
கோடை காலம் தொடங்கியதிலிருந்து 5 நாட்களுக்கு ஒருமுறை வானிலை முன்னறிவிப்புகளைத் தர இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டிருப்பதாவும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT