Published : 23 Jan 2014 12:03 PM
Last Updated : 23 Jan 2014 12:03 PM
டெல்லி சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடி வலுக்கிறது. முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று, மாநில துணைநிலை ஆளுநருடன் நடத்திய சந்திப்பு, சோம்நாத் பாரதியை காப்பாற்றுவதற்கானது எனக் கருதப்படுகிறது.
கடந்த 15-ம் தேதி இரவு, மாளவியா நகர் கிட்கி கிராமப் பகுதியில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் போதை மருந்து வியாபாரத்துடன், பாலியல் தொழிலும் செய்வதாகக் கூறி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி அங்கு நேரில் சென்றார். அவருடன் இருந்த மாளவியா நகர் போலீஸாரிடம் சோதனை நடத்தும்படி கூறியதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.
இதை ஒட்டி கிளம்பிய பிரச்சினை குறித்து அங்கிருந்த நைஜிரியா நாட்டுப் பெண்கள், சோம்நாத் பாரதி தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், சித்திரவதை செய்ததாகவும் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து, பெயர் தெரியாத நால்வர் மீது பாலியல் சித்திரவதை, பலவந்தமாக வீட்டில் புகுந்து மிரட்டியதாக வழக்கு பதிவாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை டெல்லியின் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை திடீர் என சந்தித்தார் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பு, அவரது சட்ட அமைச்சரை காப்பாற்றவா என மாளிகையின் வெளியில் இருந்த செய்தியாளர்கள் கேட்டபோது ‘இல்லை’ என மறுத்தார் கேஜ்ரிவால்.
அவரை, மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ’பைத்தியக்கார முதல்வர்’ எனக் கருத்து கூறியது பற்றிய கேள்விக்கு அவர், ‘இதில் வித்தியாசப்பட என்ன உள்ளது?’ எனப் பதிலளித்தார்.
டெல்லி சட்டசபையின் காங்கிரஸ் தலைவரான அர்விந்த்சிங் லவ்லி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் துணைநிலை ஆளுநரை சந்தித்தார். அப்போது சோம்நாத் பாரதி மீது புகார் அளித்தார்.
சோம்நாத் பாரதி விவகாரம் உட்பட கேஜ்ரிவால் அரசு மீது எழுந்துள்ள புகார்களால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படுமா என்பது குறித்து லவ்லி பதிலளித்தார்.
‘பொதுமக்களுக்கு செய்ய இருப்பதாக அவர்கள் கூறிய 18 விஷயங்களை அமல்படுத்த வேண்டி, காங்கிரஸ் ஆதரவளித்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி பணியாற்றவில்லை எனில், ஆதரவை வாபஸ் வாங்குவது குறித்து கண்டிப்பாக பரிசீலனை செய்வோம்.’ எனப் பதிலளித்தார்.
இதே பிரச்சினையை மையமாக வைத்து டெல்லி மாநில பாஜக தலைவர் விஜய் கோயல் தலைமையில் ஒரு குழு, அதன் காவல்துறை ஆணையரை சந்தித்து நேற்று பிற்பகல் புகார் அளித்தது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்கள், சோம்நாத் பாரதி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு போலீஸாருக்கு தில்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT