Last Updated : 02 Oct, 2015 11:34 AM

 

Published : 02 Oct 2015 11:34 AM
Last Updated : 02 Oct 2015 11:34 AM

அமைதி பேச்சுவார்த்தையை தொடர்வது பாகிஸ்தான் கைகளிலேயே இருக்கிறது: சுஷ்மா

இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை தொடர்வது பாகிஸ்தானின் கைகளிலேயே இருக்கிறது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையில் பேசியபோது சுஷ்மா ஸ்வராஜ் இதனைத் தெரிவித்தார். முன்னதாக நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஐ.நா. சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், "பாகிஸ்தான் ஆயுதப் போட்டியை ஊக்குவிக்கவில்லை. நாங்கள் பொறுப்புள்ள அணுஆயுத நாடு. மூன்றாவது முறையாக நான் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுடன் நல்லுறவைப் பேண முயற்சி மேற்கொண்டேன். ஆனால் இந்திய தரப்பில் அமைதி முயற்சியைப் புறக்கணித்துவிட்டனர். தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து முனைகளிலும் போரிட்டு வருகிறோம்" என்றார்.

மேலும், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண நான்கு யோசனைகளை முன்வைத்தார்.

அந்த 4 யோசனைகள்:

1. கடந்த 2003-ம் ஆண்டு போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் மதிப்பளிக்க வேண்டும். அதன்படி சண்டைநிறுத்தத்தை கண்காணிக்க ஐ.நா. பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

2. எந்தவொரு சூழ்நிலையிலும் இரு நாடுகளும் படைபலத்தை பயன்படுத்துவதோ, மிரட்டுவதோ கூடாது.

3 காஷ்மீர் பகுதிகளில் இருந்து இந்திய ராணுவத்தை விலக்க வேண்டும்.

4. எவ்வித நிபந்தனையும் இன்றி சியாச்சின் மலைச்சிகரத்தில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்.

இந்நிலையில், இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை தொடர்வது பாகிஸ்தானின் கைகளிலேயே இருக்கிறது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா பேசியதாவது:

பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் எல்லையில் பயங்கரவாதம், காஷ்மீரில் கட்டவிழ்க்கப்படும் வன்முறை இல்லாத சூழலியே அப்பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் மட்டும் இந்தியா உறுதியாக இருக்கிறது. இருநாட்டு நல்லுறவை பேணுவதற்காகவே, இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம், ராணுவ தளபதிகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஆகியனவற்றை நாங்கள் முன்மொழிந்தோம். ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மறைமுகமாக ஆதரிப்பதை நிறுத்தவில்லை.

70-வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐ.நா. சபை சர்வதேச பயங்கரவாதம் குறித்த தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, பயிற்சி அளிக்கும் நாடு எதுவாக இருந்தால் அதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவுடன் நல்லிணக்கத்தை விரும்புவதாக கூறும் பாகிஸ்தான், மும்பை தாக்குதல் குற்றவாளியை சுதந்திரமாக நடமாட அனுமதித்திருக்கிறது. அண்மையில் காஷ்மீருக்குள் இரண்டு தீவிரவாதிகளை ஊடுருவச் செய்திருக்கிறது.

காஷ்மீர் மக்களும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித்தவிப்பதாக ஷெரீப் கூறியிருக்கிறார். ஆனால், உண்மையில் காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன.

எனவே, இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை தொடர்வது பாகிஸ்தானின் கைகளிலேயே இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x