Published : 25 Sep 2014 12:49 PM
Last Updated : 25 Sep 2014 12:49 PM
‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு நல்லரசாக மட்டுமல்ல, திறன்மிக்க வல்லரசாகவும் செயல்படும் என்று தெரிவித்தார்.
வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து இந்தியாவின் உற் பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை கோஷத்தை பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி உள்நாட்டு நிறுவனங் களும் அந்நிய நிறுவனங்களும் இந்தியாவில் ஆலைகள் அமைத்து இங்கேயே பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ‘மேக் இன் இந்தியா’ பிரச்சார இயக்கத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.
இதில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்டிரி, விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா உட்பட 500-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்றனர். விழாவில் மோடி பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளில் நான் சந்தித்த தொழிலதிபர்களில் பலர், இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் தொடங்க போவதாக கூறினர். இதற்கு அரசியல் காரணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அரசு கொள்கைகள் அவ்வப் போது மாற்றப்படுவது, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலதிபர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் நம்பிக் கையை இழந்துவிட்டனர். அவர் களின் அச்சத்தை அகற்றவும் நம்பிக்கையை வளர்க்கவும் நட வடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
எந்தவொரு விஷயத்துக்கும் நம்பிக்கைதான் அடிப்படை. நமக்குள் பரஸ்பரம் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
உலகத்தைப் பொறுத்தவரை அந்நிய நேரடி முதலீடு என்பது ஒரு தொழில் முதலீட்டு வாய்ப்பு. என்னைப் பொறுத்தவரை அந்நிய நேரடி முதலீடு என்பதை ‘முதலில் இந்தியாவை முன்னேற்ற வேண்டும்’ (FDI- First Develop India) என்றே அர்த்தம் கொள்கிறேன்.
நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். ஏழைகளுக்கு வேலை கிடைத்தால் அவர்கள் குடும்பங்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். நாட்டின் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அதேநேரம் அதன் பயன்கள் நமது நாட்டு இளைஞர்களை முறையாகச் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்பது சிங்க நடைக்கு ஒப்பாகும். நமது ஒவ்வொரு அடியும் சிங்கத்தின் நடை போன்று இருக்க வேண்டும்.
நான் நல்லாட்சி குறித்து மட்டும் பேசிக் கொண்டிருக்கவில்லை. மத்தியில் திறன்மிக்க அரசை நிறுவ வேண்டும் என்பதே எனது இலக்கு. அதன்படி மத்திய அரசு நல்லரசாக மட்டுமல்ல, திறன்மிக்க வல்லரசாகவும் செயல்படும்.
இந்த நாடு உங்களுடையது. நீங்கள் (தொழிலதிபர்கள்) யாரும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. இந்தியாவில் இருந்து ஒரு நிறுவனம் வெளியேறுவதைக்கூட நான் விரும்பவில்லை. நமது நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வளர்ந்து பிரகாசிக்க வேண்டும்.
இந்தியாவுக்கு வாருங்கள் என்று வெளிநாட்டு நிறுவனங்களை நாம் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கின்றன. அவர்களின் தயாரிப்புகளுக்கு நாம் நம்முடைய விலாசத்தை (‘மேக் இன் இந்தியா’) அளிக்க வேண்டும்.
நாட்டுக்கு நெடுஞ்சாலைகள் எவ்வளவு அவசியமோ, அதேபோல் தகவல் தொழில் நுட்பமும் அவசியம். நமது நாட்டை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற வேண்டும் என்று மோடி பேசினார்.
‘மேக் இன் இந்தியா’ பிரச் சாரத்துக்காக சிங்கம் உருவம் கொண்ட லோகோ வெளியிடப் பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மாக www.makeinindia.com என்ற இணையதளமும் தொடங் கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் ஆட்டோமொபைல், விமானப் போக்குவரத்து, ரசாயனம், பாது காப்பு உள்ளிட்ட 25 துறை கள் குறித்த விவரங்கள் அளிக்கப் பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில் இந்தியாவில் தொழில் தொடங்கு வது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கப் படும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT