Published : 24 Mar 2017 12:44 PM
Last Updated : 24 Mar 2017 12:44 PM
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது 7 வயது மகனை மர்ம நபர்கள் புதன்கிழமை இரவு அமெரிக்காவில் படுகொலை செய்தனர். இது குறித்து ஆந்திர முதல்வர் கண்டனம் தெரிவித்ததோடு சட்டப்படி விசாரணை நடத்தி உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்க தூதரக அதிகாரிகளையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதன் கிழமை இரவு சுமார் 7 மணியளவில் நியூஜெர்சி மேபுல் பகுதியில் வசித்து வரும் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த தாயையும், அவரது 7 வயது மகனையும் கொடூரமான முறையில் கழுத்தை வெட்டி மர்ம கும்பல் படுகொலை செய்து தப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், பர்ச்சூரு மண்டலம், திம்மராஜு பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நர்ரா அனுமந்த ராவ் (46). இவரது மனைவி சசிகலா (40). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகன் அனுஷ் சாய் (7).
அனுமந்த ராவ் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு சென்று பணியில் சேர்ந்தார். அங்கு அவர் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சசிகலாவும் வீட்டில் இருந்த படியே ஒரு தனியார் நிறுவனத்திற்காகப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன் கிழமை அனுமந்த ராவ் பணிக்கு சென்றார். மாலை சசிகலா தனது மகன் அனுஷ் சாயை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர் மர்ம நபர்கள் சசிகலாவின் வீட்டிற்குள் நுழைந்து அவரையும், அவரது மகனையும் படுகொலை செய்து விட்டு தப்பி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தார் போலீஸாருக்கும், அனுமந்த ராவிற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். யார் கொலை செய்தது? எதற்காக கொலை செய்தனர் என்பது விசாரணையில் தெரியவேண்டி உள்ளது.
இந்த தகவல் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஹனுமந்த ராவின் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் வியாழக்கிழமை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்ததோடு, இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க தூதரகத்திற்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தையும் கேட்டுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT