Published : 20 Mar 2014 09:51 AM
Last Updated : 20 Mar 2014 09:51 AM

சுரேஷ் கல்மாடியை ஓரங்கட்டிய காங்கிரஸ்

புனே தொகுதியின் தற்போதைய எம்.பி. சுரேஷ் கல்மாடிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் தலைமை மறுப்புத் தெரிவித்துவிட்டது.

அந்த தொகுதியில் மகாராஷ்டிர மாநில அமைச்சர் பதங்காவ் கதமின் மகன் விஸ்வஜித்தை வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.

புனே தொகுதிக்கான மக்களவை உறுப்பினராக உள்ள சுரேஷ் கல்மாடி, விளையாட்டுத் துறையில் நிர்வாகியாக நீண்ட காலம் பணியாற்றியவர். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக பணிபுரிந்துள்ளார். 2010-ம் ஆண்டு, கல்மாடியின் தலைமையின் கீழ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டன. இதில், பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக கல்மாடி மீது புகார் கிளம்பியது.

இதைத் தொடர்ந்து விளையாட்டு அமைப்புகளின் பொறுப்பிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியும் அவரை கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட விடாமல், ஓரங்கட்டி வைத்திருந்தது.

இந்நிலையில், புனே தொகுதியில் மீண்டும் போட்டியிட கல்மாடி முயற்சித்து வருகிறார் என்றும், அவருக்கு வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் அவரின் ஆதரவாளரை களம் இறக்குவார் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால், அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், புனே தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஸ்வஜித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சுரேஷ் கல்மாடியை காங்கிரஸ் ஓரங்கட்டி விட்டது உறுதியாகியுள்ளது. நீண்ட காலமாக புனே தொகுதி

எம்.பி.யாக உள்ள சுரேஷ் கல்மாடி, அந்நகரில் தனக்கென தனி கோஷ்டியை உருவாக்கி, செல்வாக்குடன் இருக்கிறார். கல்மாடியின் ஆதரவாளர்கள், விஸ்வஜித்தின் தேர்தல் வெற்றிக்கு கை கொடுப்பார்களா என்பது சந்தேகமே என்று அக்கட்சி வட் டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x