Published : 04 Feb 2014 01:47 PM
Last Updated : 04 Feb 2014 01:47 PM
வாகனங்களில் பயன்படுத்தப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (சிஎன்ஜி) விலை ஒரு கிலோவுக்கு ரூ.15 குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
அதே போன்று வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை ஒரு கியூபிக் மீட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால், டெல்லி, அகமதாபாத் போன்ற பெரு நகரங்களில் உள்ள நுகர்வோர் பெரிதும் பயனடைவர்.
கடந்த மாதம் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.4.50 அதிகரிக்கப்பட்டது. இதற்கு டெல்லியின் ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு, சிஎன்ஜி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தன.
இந்த நிலையில் இப்போது, சிஎன்ஜி காஸ் விலையை குறைக்கப்போவதாக மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீரப்ப மொய்லி கூறியதாவது: டெல்லியில் சிஎன்ஜி காஸின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.15 குறைக்கப்படும். குழாய் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலை ஒரு கியூபிக் மீட்டர் ரூ.5 குறைக்கப்படும்.
தற்போது உள்நாட்டு உற்பத்தியிலிருந்து கிடைக்கும் சிஎன்ஜி காஸில் 80 சதவீதம் மட்டுமே பெருநகரங்களில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இனிமேல் உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதமும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT