Published : 03 Oct 2013 08:43 AM Last Updated : 03 Oct 2013 08:43 AM
பிரதமரின் அதிகாரம் பலவீனப்படுத்தப்படவில்லை - மணீஷ் திவாரி
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி பறிப்பு நடவடிக்கையிலிருந்து காப்பாற்றிட வகை செய்யும் மசோதா, அமைச்சரவை எடுத்த முடிவின்படி, உரிய நேரத்தில் நாடாளுமன்றத்திலிருந்து வாபஸ் பெறப்படும் என்றார் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி.
இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறும்போது "குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி பறிப்பிலிருந்து காப்பாற்றிட கொண்டுவந்த அவசரச் சட்டத்தை வாபஸ் பெறுவது என்கிற முடிவு அமைச்சரவையில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இப்போது திடீர் திருப்பமாக வாபஸ் பெறப்படுகிறது.
இதை பிரதமரின் அதிகாரத்தை பலவீனப்படுத்திடும் முயற்சியாக கருதக்கூடாது. ஜனநாயகம் என்பது சர்வாதிகார அரசாட்சி முறையல்ல. வெவ்வேறு கருத்துகளுக்கும் மரியாதை தரப்பட வேண்டும் என்பதுதான். அமைச்சரவை புதன்கிழமை எடுத்த முடிவு இதைத்தான் உணர்த்துகிறது.
தன்முன் வைக்கப்பட்ட விமர்சனங்கள் அடிப்படையில் அவசரச் சட்டம் பற்றி தனது தரப்பு கருத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழலில் அமைச்சரவை ஏற்கெனவே எடுத்த முடிவு மறு ஆய்வு செய்யப்பட்டு அவசரச் சட்டத்தையும் மசோதாவையும் வாபஸ் பெறுவதாக தீர்மானிக்கப்பட்டது" என்றார் மணீஷ் திவாரி.
WRITE A COMMENT