Published : 18 Jan 2014 10:06 AM
Last Updated : 18 Jan 2014 10:06 AM
மும்பையில் தாவூதி போரா சமூகத்தின் மதத் தலைவர் சையதினா முகமது புர்ஹானுதீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
மதத் தலைவர் சையதினா முகமது புர்ஹானுதீன் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 102. உலகெங்கிலும் உள்ள தாவூதி போரா சமூகத்தின் தலைவராக 1965-ம் ஆண்டு முதல் அவர் இருந்தார். அதற்கு முன் அவரின் தந்தை டஹேர் சைபுதீன் தலைவராக இருந்தார். போரா சமூகம், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தது. புர்ஹானுதீனுக்கு 7 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
புர்ஹானுதீனின் உடல், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள அவரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு திரண்டிருந்த கூட்டத்தினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். புர்ஹானுதீனின் வீடு, முதல்வர் பிருதிவிராஜ் சவாணின் இல்லம் அருகே அமைந்துள்ளது.
நெரிசலுக்கு காரணம் என்ன?
அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் உரிய ஏற்பாடுகளை செய்யாமல் விட்டதால்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: “அஞ்சலி செலுத்த எத்தனை பேர் வருவார்கள் என்பதை முன்கூட்டியே அந்த சமூகத்தின் தலைவர்கள் கணிக்கத் தவறிவிட்டனர். முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக அவர்களை நாங்கள் தொடர்பு கொண்டபோது, ‘புர்ஹானுதீனின் இல்லம் அருகே யாரையும் அனுமதிக்க மாட்டோம். அனைவரும் இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க வருவார்கள்’ எனத் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தோம்.
ஆனால், வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் சைபி மஹாலில் வைக்கப்பட்டுள்ள புர்ஹானுதீனின் உடலை காண அனுமதிக்கப்படுகிறது என்று அவர்கள், பலருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டனர். இதைத் தொடர்ந்து மும்பை மற்றும் சுற்றுவட்டார மக்கள் அதிகளவில் குவியத் தொடங்கிவிட்டனர்.
அதன்பின் எங்களுக்கு தகவல் தெரிவித்த தலைவர்கள், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என கூறியிருந்தனர். ஆனால், 60 ஆயிரம் பேர் திரண்டதால் கூட்டத்தை சமாளிக்க இயலாத நிலை ஏற்பட்டது” என்றார்.
இறுதிச்சடங்கு
புர்ஹானுதீனின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அவரது உடல் காலை 10 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெந்தி பஜார் பகுதியில் உள்ள ரவுதத் டஹேரா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இறுதி ஊர்வலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT