Published : 25 Nov 2013 04:01 PM
Last Updated : 25 Nov 2013 04:01 PM
ஆருஷியை கொன்றது அவரது பெற்றோர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் தம்பதிதான் என சிபிஐ நிரூபித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷியாம்லால் திங்கள்கிழமை பிற்பகல் 3.25 மணிக்கு தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்புக்குப் பின் தல்வார் தம்பதியர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வசிக்கும் பல் மருத்துவரான ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வாரின் ஒரே மகளான 14 வயது ஆருஷி, 2008 மே 15-ம் தேதி நள்ளிரவு மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். உ.பி. போலீசார் தல்வார் வீட்டின் மேல் மாடிக் கதவை மறுநாள் திறந்தபோது, அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதை தொடர்ந்து 2008 மே 23-ல் ராஜேஷ் தல்வார்தான் அவரது மகளை கொலை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டு கைதானார். பின்னர் 50 நாட்களுக்கு பின் ராஜேஷ் ஜாமீன் பெற்றார்.
2008 ஜூன் 1-ல் சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. 2010 மே 29- ல் காஜியாபாத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் ராஜேஷின் மீது சந்தேகம் இருந்தாலும், ‘தடயங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததால் வழக்கை முடித்துவிட வேண்டும்’ என சிபிஐ கூறியது. இதை, நீதிமன்றம் ஏற்க மறுத்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற தல்வாருக்கு பயன் எதுவும் கிடைக்கவில்லை. 2 வருடம், 9 மாத விசாரணைக்கு பின் உ.பி.யின் காஜியாபாத்திலுள்ள சிபிஐயின் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை மதியம் 3.25 மணிக்கு தனது தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்பில் நீதிபதி ஷியாம்லால், ஐபிசி 302, 201, 34 ஆகிய பிரிவுகள் மற்றும் வழக்கை திசை திருப்ப முயன்றதாக ஐபிசி 203 பிரிவின் கீழ் தல்வார் தம்பதி குற்றவாளிகள் என அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டவுடன் இருவரும் கதறி அழுதனர்.
இதற்கான தண்டனை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப் படும் என நீதிபதி கூறியபோது, குற்றவாளிகள் சார்பில் அதை இன்றே அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு நீதிபதி மறுத்ததுடன், தல்வார் தம்பதியை கைது செய்து சிறைக்கு அனுப்புமாறு சிபிஐக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதை அடுத்து ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வாரை கைது செய்த சிபிஐ, இருவரையும் காஜியாபாத்தின் தாஸ்னா சிறைக்கு அனுப்பினர்.
இது குறித்து வழக்கறிஞர் நரேஷ் யாதவ் கூறுகையில், ‘இரட்டைக் கொலை வழக்கில் தல்வார் தம்பதிதான் குற்றவாளிகள் என்பதை ஏற்கனவே எதிர்பார்த்தோம். ஏனெனில், குற்றம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் நான்கு பேர். அவர்களில் இருவர் கொலை செய்யப்பட்டுவிட்டனர். மீதம் இருந்தது தல்வார் தம்பதி மட்டுமே. மறுநாள் காலை வந்த வேலைக்காரிக்கும் இவர்கள்தான் கதவை திறந்து விட்டுள்ளனர். இது நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை தர வேண்டும் என்பது எங்கள் கருத்து’ எனத் தெரிவித்தார்.
மற்றொரு வழக்கறிஞர் எஸ்.சி. சர்மா கூறுகையில், ‘இதைத்தான் உ.பி. போலீசார் குற்றம் நடந்த ஒரே வாரத்தில் கண்டுபிடித்து ராஜேஷ் தல்வாரை சிறையில் தள்ளினர். அது தவறு எனக் கூறி சர்ச்சையாகி வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட பின், அதையே மீண்டும் கூற அவர்களுக்கு 2 வருடம் பிடித்திருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
தல்வார் தம்பதி அறிக்கை
இந்த முடிவை ஏற்கனவே எதிர்பார்த்தது போல் ஓர் அறிக்கை தல்வார் தம்பதி சார்பில் தயாராக நீதிமன்றம் கொண்டு வரப்பட்டிருந்தது. அது தீர்ப்பிற்கு பின் தல்வார் தம்பதி சார்பாக வளாகத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
‘நாங்கள் செய்யாத குற்றத்தில் சிக்க வைக்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தது பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இதில், தோற்கடிக்கப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. உண்மையான நீதிக்காக இந்த போராட்டம் தொடரும்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி ராஜேஷ் தல்வாருடன் நீதிமன்றம் வந்திருந்த அவரது அண்ணி வந்தனா தல்வார், ‘இவர்கள்தான் குற்றவாளிகள் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆரம்பம் முதலே இந்த வழக்கு ஒருதலைபட்சமாகவே இருந்தது. இதை செய்தது தல்வார்தான் எனில், துவக்கத்தில் சிபிஐ ஆதாரம் இல்லை என முடிக்க முயன்றதை எதிர்த்து அவர் ஏன் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும்?’ என கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT