Last Updated : 08 Feb, 2014 09:40 AM

 

Published : 08 Feb 2014 09:40 AM
Last Updated : 08 Feb 2014 09:40 AM

துணை நிலை ஆளுநரையும் விடவில்லை ஆம் ஆத்மி!- காங்கிரஸின் முகவராகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு

டெல்லி காவல்துறை, மத்திய அரசு, பாஜக, காங்கிரஸ், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினர் மீதும் குற்றம்சாட்டி வந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது டெல்லி துணைநிலை ஆளுநர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. துணை நிலை ஆளுநர் காங்கிரஸ் கட்சியின் முகவர்போலச் செயல்படுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக ஆம் ஆத்மி தலைமை யிலான டெல்லி அரசு துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்கை அணுகியது. ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி மசோதாவை நிறைவேற்ற முடியாது என ஆளுநர் கூறியதாகக் கருதப்படும் தகவல் வெளியானதை அடுத்து துணை நிலை ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அசுதோஷ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆளுநர் மாளிகையில் பேசப்படும் விஷயங்கள் மக்களின் கவனத் துக்கு உடனடியாகக் கசிய விடப்படு கின்றன. வேண்டும் என்றே செய்தி நிறுவனங்கள் மூலம் தகவல்கள் கசிய விடப்படுகின்றன. இது ஆம் ஆத்மி கட்சியை குறி வைத்து செய்யப்படுகிறது.

மக்கள்நலனில் அக்கறை கொள்ளாமல், துணைநிலை ஆளுநர் நஜீப்ஜங் காங்கிரஸ் கட்சியின் முகவர்போலச் செயல்படுகிறார். இதுபோன்ற விவகாரங்களில் அரசியல் செய்து, ஆம் ஆத்மி கட்சியை மக்கள் மத்தியில் தவறாகச் சித்தரிக்கவும், டெல்லி அரசை பலவீனப்படுத்தவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆளுநர் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருக்கு இடை யிலான கடிதங்கள் வெளியில் கசிந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.

பின்னணி

வரும் 16-ம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி அதில், டெல்லி அமைச்சரவை இறுதிசெய்த ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு முடிவு செய்திருந்தது. இதனை அனுமதிப்பது தொடர்பாக, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங் சட்ட ஆலோசனை கோரி சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில், ‘மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன் மத்திய அரசிடம் முன் அனுமதி பெறவில்லை எனில் அது அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கும்’ என அவர் கருத்து கூறியிருந்தார்.

இத்தகவல்கள் வெளியே கசிந்ததே, ஆளுநர் மீது ஆம் ஆத்மி குற்றம் சாட்டுவதற்குக் காரணமாகும்.

காங்கிரஸ் சந்திப்பு

இந்நிலையில், ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர் அர்விந்த்சிங் லவ்லி தலைமையிலான பிரதிநிதிகள் நஜீப்ஜங்கை சந்தித்தனர். அப்போது, லோக்பால் மசோதா முறையாக அறிமுகப்படுத் தப்படுகிறதா என்பதை உறுதி செய்யும்படி காங்கிரஸ் கோரியுள் ளது. இது குறித்து அர்விந்த் லவ்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜன்லோக்பால் மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. அதனை சட்டத்துக்குப் புறம்பாகக் கொண்டு வரும் முறையைத் தான் எதிர்க்கிறது. சட்டப்பேரவைக் கூட்டத்திலும் கடுமையாக எதிர்போம்’” என்றார்.

காங். பாஜக கண்டனம்

இதற்கிடையே, துணைநிலை ஆளுநர் மீதான ஆம் ஆத்மியின் குற்றச் சாட்டுகளுக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ‘ஆளுநரை மதிக்காத வகையில் பேசியுள்ள ஆம் ஆத்மியினர் பேச்சு அவர்களுக்கு சட்டம் தெரியவில்லை என்பதையும் குறைந்த அனுபவத் தையும் காட்டுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி எதிர்கட்சித்தலைவரான பாஜகவின் ஹர்ஷவர்தன் கூறுகையில், ‘சட்டத்தைக் காக்கும் தலைவ ரான ஆளுநரை அவமதிப்பதை எவ்வளவு கண்டித்தாலும் அது குறைவுதான். யூனியன் பிரதே சங்களின் ஒன்றான டெல்லி மற்ற மாநிலங்களை போல் அல்ல. அதன் சட்டதிட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் செய்பவர்களின் ஆட்சி எப்படி மக்கள் நலனுக்கானதாக இருக்கும்” என்றார்.

இந்த மசோதாவிற்கு அர்விந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவை ஒப்புதல் தரும் முன்பாக அதன் மீது சட்ட ஆலோசனை பெறப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது, பற்றி ஆம் ஆத்மியின் கட்சி வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘இதன் மீது ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் நான்கு மூத்த வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் ஒப்புதல் அளித்தோம். இதை அறிமுகப்படுத்த நீதிமன்றப் படிகள் ஏறவும் தயங்க மாட்டோம்’ என்றனர்.

ஆளுநருக்கு கேஜ்ரிவால் கடிதம்

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசியல் சட்டப்படி மத்திய அரசின் ஒப்புதல் தேவை இல்லை என அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணை நிலை ஆளுநருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீங்கள் காங்கிரஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் நிர்ப்பந்தத்தின் கீழ் இருக்கிறீகள் என்பது எனக்கு தெரியும். இவர் கள், ஜன்லோக்பால் மசோதாவை டெல்லியின் இந்திராகாந்தி மைதானத்தில் மக்கள் முன்னிலையில் நிறைவேற்ற விடக் கூடாது என உங்களை வற்புறுத்துகிறார்கள்.

ஒவ்வொரு மசோதாவிற்கும் மத்திய அரசின் ஒப்புதல் வாங்க வேண்டும் எனில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? இதன் மீது அரசியல் சட்டக் கருத்து கேட்க அனுப்புவதற்கு முன் நீங்கள் டெல்லி அரசிடம் ஆலோசனை செய்யாதது ஏன்? இதை நிறைவேற்றும் முன் மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என சொலிசிட்டர் ஜென ரல் கூறியது தவறான கருத்து.

ஆளுநர் இந்திய அரசியல் சாசன சட்டத்தை காக்க பதவி ஏற்றாரே தவிர எந்தக் கட்சியையோ அல்லது உள்துறை அமைச்சகத்தையோ அல்ல என, அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ‘நீங்கள் மிகவும் நேர்மையான நபர் என பெயர் எடுத்தவர். அவர்கள் (காங்கிரஸார் தரும் நிர்பந்தங்களை ஏற்பதா, வேண்டாமா என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x