Last Updated : 01 Jul, 2016 03:37 PM

 

Published : 01 Jul 2016 03:37 PM
Last Updated : 01 Jul 2016 03:37 PM

என் வாழ்நாள் முழுதும் பெற்றோருடனேயே வாழ விரும்புகிறேன்: மீட்கப்பட்ட சிறுவன் சோனு உருக்கம்

6 ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியிலிருந்து கடத்தப்பட்ட 12 வயது சிறுவன் சோனு வெளியுறவு அமைச்சக உதவியினால் மீண்டும் பெற்றோருடன் இணைந்ததையடுத்து, இனி வாழ்நாள் முழுதும் பெற்றோருடனேயே கழிப்பேன் என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

6 ஆண்டுகளாகிவிட்டதே தன் மகன் தன்னை அடையாளம் கண்டு கொள்வானா என்று தந்தை மெஹ்பூப் ஐயம் கொண்டிருந்தார். ஆனால் டாக்கா-டெல்லி விமானத்திலிருந்து இறங்கியவுடன் அங்கு குழுமியிருந்தவர்களில் தன் தந்தை மெஹ்பூபை சரியாகஅடையாளம் கண்டான் சோனு.

“சோனு ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டான். என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் உடனேயே அம்மா பற்றி கேட்டான், விமான நிலையத்துக்கு வெளியே உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்றேன் நான்” என்று மெஹ்பூப் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.

2010-ம் ஆண்டு டெல்லியில் உள்ள சீமாபுரியில் தன் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த சோனு கடத்தப்பட்டு வங்கதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு கடத்தல்காரன் ரஹிமா சோனுவை சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளான். இந்நிலையில்தான் அங்கு ஜமால் இபின் மூசா என்பவர் பல சூழ்ச்சிகளை எதிர்கொண்டு சிறுவனை மீட்டுள்ளார்.

சோனு கூறும்போது, “என் பெற்றோருடன் இனி நான் வாழ்நாள் முழுதும் இருப்பேன்” என்றான் உருக்கமாக.

சோனுவின் அண்ணன் நோன்ட்டு (14) தனது சகோதரன் மீண்டது குறித்து கூறும் போது “என் கூடவே விளையாடிக் கொண்டிருப்பான் சோனு. அவன் எனது பெஸ்ட் ஃபிரெண்ட். அவன் காணாமல் போன பிறகு அவனது விளையாட்டுப் பொம்மைகளை பத்திரமாக வைத்திருக்கிறேன். இப்போது வீட்டுக்குப் போனவுடன் அந்தப் பொம்மைகளை அவனுக்குப் பரிசாக அளிப்பேன்.

சோனு காணாமல் போகும்போது அவனது இளைய சகோதரன் பாபு தவழும் வயதில் இருந்தான். இளம் சகோதரி சாந்தினி சோனு காணாமல் போகும்போது பிறக்கவில்லை.

சீமாபுரியில் சோனுவுக்காக அப்பகுதி மக்கள் திரண்டிருந்தனர். சோனு கடத்தப்பட்ட விவகாரம் சீமாபுரி பகுதி மக்களிடையே பீதியைக் கிளப்பியது. ஆனால் தற்போது சுஷ்மா ஸ்வராஜ் உதவியுடன் சோனு மீட்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் சோனுவுக்கு நாயக வரவேற்பு அளித்தனர். சிலர் சோனுவை தோள்களில் சுமந்து சென்றனர், சிலர் சோனுவுக்கு மாலை அணிவித்தனர்.

தந்தை மெஹ்பூப் கூறும்போது, “இப்போது நாங்கள் ஈத் பண்டிகையை இருமுறை கொண்டாடுவோம். தங்கள் மகனைக் காப்பாற்றிக் கொடுத்த ஜமாலை நேரில் சந்தித்து நன்றி கூறவுள்ளோம். நாங்கள் ஏற்கெனவே விசா வாங்கி விட்டோம். ஜமாலை சந்திப்பதற்காக கொஞ்சம் பணமும் சேமித்துள்ளோம். ஜமால் எங்கள் கடவுள்.

சோனுவை ஜமால் மீட்கும் முயற்சியில் தவறான குற்றங்கள் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அவர் தனது வேலையையும் இழந்தார். இவர்தான் பிற்பாடு டெல்லிக்கு பயணித்து சோனுவின் பெற்றோரைச் சந்தித்து விவரங்களை கூறியுள்ளார்.

மே 23, 2010-ல் சோனு கடத்தப்பட்ட போது வயது 6. இவர்கள் வீட்டில் குடியிருந்த தம்பதியினர்தான் சோனுவைக் கடத்தியுள்ளனர், பிறகு இவர்கள் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். “நான் ரூ.90,000 வரை ஏற்பாடு செய்து கடத்தல்காரர்கள் கூறிய காஸியாபாத் நபரிடம் கொடுத்தேன். ஆனால் எங்களை அவர்கள் ஏமாற்றி விட்டு இந்தப் பணத்தை வங்கதேசம் செல்ல பயன்படுத்தியது பிற்பாடுதான் தெரியவந்தது.

தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக பழிக்குப் பழி வாங்க தன் மகனை கடத்தியிருக்கலாம் என்கிறார் தந்தை மெஹ்பூபா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x