Published : 28 Aug 2016 10:43 AM
Last Updated : 28 Aug 2016 10:43 AM
எந்த ஒரு செயலிலும் முழுத் திறமையைக் காட்டி உச்சத்தைத் தொட வேண்டும் என்று நாம் முயற்சி செய்வதில்லை; சுமாரான சாதனைகளையும் சாதாரண திறமை களையும் கூட மகிழ்ந்து ஏற்றுக்கொண்டுவிடும் மனோபாவம் இருக்கிறது. இருந்தாலும் கூட (in spite of) என்ற ஆங்கிலச் சொற்றொடரை அதற்காகவே அடிக்கடி கையாள்கிறோம். ரியோ-டி-ஜெனிரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது இதை அதிகம் பயன்படுத்தினோம். ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஒரு போட்டியில் 4-வது இடம் என்பதுதான் ஒலிம்பிக்கில் நமது சாதனை. தடகளத்தில் நடந்த போட்டியில் பங்கேற்கும் தகுதி - அதுவும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு - என்பதில் கூடுதல் மகிழ்ச்சி! மற்றதில் ஒன்றுமில்லை. ஆடவருக்கான மாரத்தான் போட்டியில் தரைப்படையைச் சேர்ந்த 2 பேர் 25, 26-வது இடத்தில் வந்தனர்; தனிப்பட்ட முறையில் அவர்களுடைய முந்தைய சாதனையைவிட அது பரவாயில்லை.
ஆனால் கவனமெல்லாம் மகளிர் போட்டியில் 89-வது இடம் பிடித்த வீராங்கனை மீது. ரியோ போட்டிக்கான தகுதிப் போட்டியில் இந்தியாவில் அவர் எடுத்துக் கொண்ட நேரத்தைவிட 13 நிமிஷம் அதிகம். போட்டியில் பங்கேற்றபோது குடிக்கத் தண்ணீர் தராததால் மயங்கி விழும் நிலைக்குச் சென்றாலும் தொடர்ந்து பங்கேற்று முடித்ததாகக் கூறினார். அதை யாரிடமும் சரிபார்க்கத் தேவையில்லை என்று கருதினோம். அதிகாரிகளின் ‘அலட்சியத்துக்குப் பிறகும்’ அவர் ஓடி முடித்திருக்கிறார் என்று அனுதாபப்பட்டோம், அதற்காக அவரைப் பாராட்டினோம். அவருக்கும் 2 கிலோ மீட்டர் பின்னால் வந்த இன்னொரு இந்தியர், ‘அப்படி ஏதும் இல்லையே, தண்ணீர் இருந்ததே’ என்று பிறகு கூறினார். அதை யாரும் லட்சியம் செய்யவில்லை. நம்முடைய வீரர்களின் தோல்விக்கு இப்படி ஒவ்வொரு காரணமாகக் கூறப்பட்டது. துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றவர்கள், நவீன துப்பாக்கியை இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்கவில்லை என்றார்கள். மல்யுத்தக்காரர்களுக்குக் குளிர்சாதன வசதி கிடைக்கவில்லையாம், இருந்தாலும் முடிந்தவரை போராடினார்கள். ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்றவர் இந்தியாவின் கதாநாயகியாகிவிட்டார். எந்த வசதிகளும் இல்லாத நிலையிலும் புரோதுநோவாவைப் போல குட்டிக்கரண சாதனையை முயற்சித்தார். அவரும் அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறினார்.
பீர்ஸ் மோர்கான் கிண்டல்
120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டுக்கு 2 தோல்வி பதக்கங்கள்தானா.... இதற்கு கொண்டாட்டம் வேறா… என்று பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பீர்ஸ் மோர்கான் சீண்டினார். அதற்காக ட்விட்டரில் அவரைக் கடுமையாக விமர்சித்தனர். வெண்கலம், வெள்ளி இரண்டுமே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் தோற்ற பிறகு கொடுக்கப்படுவதால் அப்படிக் கூறியிருக்கிறார். பி.வி. சிந்துவுக்குப் பயிற்சியாளராக இருந்த கோபிசந்த் மட்டுமே நிதானத்துடன் கருத்து தெரிவித்திருந்தார். தங்கமே கிடைத்திருக்க வேண்டும், வாய்ப்பு நழுவிவிட்டது என்றார்.
விளையாட்டு என்பது திறனை உரசிப்பார்க்க நல்ல களம். காரணம் உலகத் தர வீரர்கள் போட்டி போடுகிறார்கள். அந்த போட்டிகளில் தோற்றதற்குக்கூட நம்மால் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூற முடிகிறது. நாம் கிரிக்கெட்டில் வல்லவர்களாக இருப்பதால் அதிலிருந்து ஓர் உதாரணம். 2004-ல் சிட்னி டெஸ்டின் 5-வது நாளில் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் சில கேட்சுகளை நழுவவிட்டார், ஸ்டம்பிங் வாய்ப்புகளுக்கும் அதே கதி ஏற்பட்டது. அதனால் ஸ்டீவ் வாவும் கடைநிலை பேட்ஸ்மேன்களும் தோல்வியிலிருந்து தப்பியது டன் ஆஸ்திரேலியத் தொடரை இந்தியா வெல்ல முடியாமலும் தடுத்துவிட்டனர். அலுவலகத்தில் இக் காட்சியைப் பார்த்த நாங்கள் கோபத்தில் துடித்தோம். அப்போது ஒரு சகா, “அந்தப் பையனுக்கு 18 வயதுதான் ஆகிறது, அப்படியொன்றும் மோசமாக ஆடிவிடவில்லை” என்று பார்த்திவ் படேலுக்கு ஆதரவாகப் பேசினார். வயது என்னவாக இருந்தாலும் ஒரு தேசிய அணிக்காக விளையாடும்போது அதற்கேற்ற திறமையை அவர் கொண்டிருக்க வேண்டும். சின்ன வயதுதான் என்று அவருக்குச் சலுகை காட்டுவது நியாயமே இல்லை. பார்த்திவின் தவறால் அவரைப்போன்ற இளவயது இடது கை சுழல்பந்து வீரரான முரளி கார்த்திக்குக்கு தேசிய அணியில் இடம் பெறும் வாய்ப்பு அதற்குப் பிறகு போய்விட்டது.
சாபக்கேடு
இந்தியர்களின் சாபக்கேடு என்னவென்றால் எல்லா துறைகளிலும் நாம் சராசரி திறமையே போதும் அல்லது சுமாராகச் செயல்பட்டால்கூட போதும் என்று திருப்தியடைந்துவிடுகிறோம். பல முன்னோடி நிறுவனங்களை ஏற்படுத்தித் தந்த ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் போல இப்போது நம்மிடையே யாரையும் காணவில்லை. உலகிலேயே மென்பொருள் ஏற்றுமதியில் நாம்தான் முன்னணி என்று பீற்றிக் கொள்கிறோம். ஆனால் நாம் சொந்தமாக உருவாக்கி உலகுக்கு அளித்ததாகக் கூறிக்கொள்ள சொந்தமாக ஒரு பிராண்டு கிடையாது. சீனர்களும் கொரியர்களும் செய்வதைப்போல நாம் சொந்தமாக ஒரு செல்போன் கூட தயாரிக்கவில்லை. காரணம் சீனர்களுக்கும் கொரியர்களுக்கும் பொறியியல் பட்டம் பெற்றதுடன் வாழ்க்கையின் சவால்கள் ஓய்ந்துவிடுவதில்லை. அதற்குப் பிறகுதான் அது தீவிரமாகிறது. அப்துல் கலாமை அதனால்தான் தேசிய நாயகராகக் கொண்டாட வேண்டியிருக்கிறது. பி.ஜே. ஓ ரூர்க் என்பவர் கொல்கத்தா நகரில் இருந்தபோது ‘தி டெலிகிராப்’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது. ‘உலகிலேயே அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் உள்ள முதல் நாடு இந்தியா’ என்பது அது. அதை படித்துவிட்டு ஓ ரூர்க் கொல்கத்தா தலைமை தபால் நிலையத்துக்குச் சென்றார். அங்கே எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதற்காக நிறைய பேர் உட்கார்ந்திருந்தார்கள். “உலகிலேயே அதிக அறிவியல் பட்டதாரிகளைக் கொண்ட நாட்டில் அடுத்தவர்களின் கடிதங்களை எழுதிக் கொடுக்க ஏன் இத்தனை பேர்?” என்று கேலியாக எழுதினார்.
ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக திறமையைக் காட்டிய ஏழு பேரும், சிறப்பாகச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் நன்கு செயல்பட்டனர். இறகுப் பந்து விளையாட்டில் உலகில் 10-வது இடத்திலிருந்த வீராங்கனை, 2-வது இடத்தி லிருந்தவரைத் தோற்கடித்ததல்லாமல் முதலிடத் தில் இருந்தவரை கலவரப்படுத்தினார். அதிகம் அறியப்படாத மல்யுத்த வீராங்கனை 0-5 என்று இருந்த ஸ்கோரை கடைசி 8 விநாடியில் துடிப்பாகச் செயல்பட்டு தனக்குச் சாதகமாகத் திருப்பினார். ஜிம்னாஸ்டிக் போட்டியில் 8-வது இடத்திலிருந்த ஒருவர் கடைசியில் திறமையைக் கூட்டி 4-வது இடத்துக்கு முன்னேறினார். உலக விளையாட்டுப் போட்டி என்பதால் போட்டி நடைபெறும் நாளில் அவர்கள் அனைவருமே திறமையைக் கூட்டி தரத்தையும் அதிகப்படுத்திக் கொண்டனர்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT