Published : 30 Mar 2017 03:31 PM
Last Updated : 30 Mar 2017 03:31 PM
காலத்துக்கு ஏற்றாற்போல வேலை வாய்ப்புகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நடப்பு நிகழ்வுகள், அரசியல் அதிரடிகள், காரசார விவாதங்கள் குறித்து போட்டோ/ வீடியோ மீம்களாக உருமாற்றிக் கருத்துச் சொல்லும் நபர்கள், ஐடி பணியாளர்களுக்கு இணையாகச் சம்பாதிக்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
இந்த மாற்றம் குறித்து 'தி இந்து'-விடம் (ஆங்கிலம்) பேசினார் விளம்பரப் படங்கள், சினிமா படங்கள், நிகழ்ச்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் நிறுவனமான 'த சைட் மீடியா' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லோகேஷ் ஜெய்.
''மீம் பொறியாளர் என்ற பதவியை நாங்கள் முதன்முதலாக அறிமுகம் செய்தோம். நம்மிடையே இயந்திரவியல், கட்டிடவியல், மின்னியல், மின்னணுவியல், ஐடி என ஏராளமான துறை பொறியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் தங்களின் கருத்துகளையும், யோசனைகளையும், பார்வையையும் மீம் வழியாகச் சமூகத்துக்குத் தெரிவிக்கும் மீம் பொறியாளர்கள் இல்லை. அதை உருவாக்க ஆசைப்பட்டேன்.
மீம் பொறியாளர்கள் வேலைக்குத் தேவை என்று சமூக ஊடகங்களிலேயே மீம் ஒன்றைப் பதிவு செய்தோம். தமிழகம் முழுக்கவிருந்து சுமார் 100 ரெஸ்யூம்கள் குவிந்தன.
அதில் இருந்து படைப்பாற்றல், செய்திகள் சார்ந்து இயங்கும் ஆர்வம், உடனடியாக, வித்தியாசமாகச் சிந்திப்பது ஆகிய திறமைகளை அடிப்படையாகக் கொண்டு மீம் பொறியாளர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
தற்போது அரசியல், திரை உலகம், மால்கள், உணவகங்கள், விமான போக்குவரத்து என ஏகப்பட்ட இடங்களில் மீம்களின் தேவை எக்கச்சக்கமாக இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 7 - 10 மீம்கள் உருவாக்கப்படுகின்றன. பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் நாட்களில் இந்த எண்ணிக்கை 500-ஐத் தொடும்'' என்றார் லோகேஷ்.
தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல்
இதுகுறித்து சமூக ஊடக விளம்பர இயக்குநர் ஒருவர் பேசும்போது, ''பெரிய பிராண்டுகள் கூடத் தங்களின் தயாரிப்புகளை மீம்கள் மூலமாக விளம்பரப்படுத்தித் தரச்சொல்லி எங்களை அணுகுகின்றன. இதற்கு மீம் பொறியாளர்களின் உதவி தேவைப்படுகிறது'' என்கிறார்.
'மீம் மீடியா மார்க்கெட்டிங்' என்று மீம்கள் சார்ந்து இயங்க ஒரு தனிப்பிரிவை வைத்திருக்கிறார் ராம்குமார். நம்மிடம் பேசும்போது, ''சமூக ஊடகங்களில் இயங்குபவர்களின் சராசரி வயது 30-க்கும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு பெரிய பாராக்களில் ஒரு செய்தியைச் சொல்வதை விட, மீம் வழியாகச் சொல்வது எளிதில் சென்றடைகிறது.
இதனாலேயே சமூக ஊடகங்களில் உண்மையான படைப்பாற்றலுடன் இயங்கும் நபர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு வேலை வழங்குகிறோம்'' என்கிறார்.
அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன?
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் சமூக ஊடக மேலாளர்கள் மீம்களுக்காகவே பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளனர். இவர்களின் வேலையே ஒரு கட்சி தன் கருத்தைத் தெரிவிக்கும் போது, எதிர்க்கட்சி அதற்கு புதுமையான மீம்கள் மூலம் பதில் தாக்குதல் செய்வதுதான். அரசியல் வட்டாரத்தில் அவர்கள் 'மீம் பாய்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு அரசியல் பற்றிய அறிவோடு, திரையுலகம் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மீம் பொறியாளர்களின் சம்பளம் குறித்து அதிமுகவின் முன்னாள் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறும்போது, ''ஆரம்ப கட்டத்தில் ரூ.5,000 முதல் ரூ.18 வரை மீம் பொறியாளர்கள் சம்பாதிக்கின்றனர். அதுவே முக்கியமாக கட்டத்தில் ஒரு மீமுக்கு ரூ.25,000 வரை சென்ற நிகழ்வும் இருக்கிறது'' என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT