Published : 02 Oct 2013 11:29 AM
Last Updated : 02 Oct 2013 11:29 AM

மத்தியப் பிரதேச சிறையில் இருந்து 7 சிமி பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

மத்தியப் பிரதேசத்தின் கந்துவா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிமி அமைப்பின் பயங்கரவாதிகள் 7 பேர் செவ்வாய்க்கிழமை தப்பியோடிவிட்டனர்

தடுக்க முயன்ற சிறைக்காவலர்கள் இருவரை அவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். காவலர்களிடம் இருந்த கைத்துப்பாக்கிகள், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவற்றையும் அந்த பயங்கரவாதிகள் பறித்துச் சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவரை போலீஸார் சில மணி நேரத்திலேயே கைது செய்து விட்டனர்.

தப்பியவர்களில் இருவர், 3 பேரை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். அனைவரும் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பயங்கரவாதிகள் தப்பியது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் மனோஜ் சர்மா, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியது: கந்துவா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் 7 பேரும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சிறையில் உள்ள கழிப்பறை சுவரை உடைத்து தப்பியுள்ளனர். அவர்களைத் தடுக்க முயன்ற சிறைக் காவலர்கள் இருவரை, தாங்கள் வைத்திருந்த கத்திகளால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளனர். காவலர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர்களிடம் இருந்த கைத்துப்பாக்கிகள், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர் என்றார்.

போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் முனிராஜு, “போர்வைகளை பயன்படுத்தி உயரமான சிறைச்சாலை சுவரில் ஏறிக் குதித்துள்ளனர். அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களில் ஏறி அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அந்த பகுதியில் பணியில் இருந்த இரு போலீஸார் பயங்கரவாதிகளை துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது பயங்கரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீஸாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். எனினும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை” என்றார்.

அம்ஜத், அஸ்லாம், ஜாகீர், மெஹபூப், இஜாசுதீன், அபு பாசில், ஆபித் மிர்ஷா ஆகியோர் தப்பிச் சென்ற பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆபித் மிர்ஷா, சர்வோதயா காலனி அருகே தப்பிச் சென்ற சில மணி நேரத்திலேயே போலீஸாரிடம் பிடிபட்டார். மீதமுள்ளவர்களைப் பிடிக்க 15 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள மத்தியப் பிரதேச மாநில சிறைத் துறை அமைச்சர் அந்தார் சிங் ஆர்யா, சிறையை உடைத்து பயங்கரவாதிகள் தப்பியது குறித்து உயர்நிலை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சிறைத் துறையினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) இந்தியாவில் 2001-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன் அவர்கள் இணைந்து செயல்பட்டதே இதற்குக் காரணம். சிமி இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலர் இப்போது சிறையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x