Published : 23 Apr 2017 11:32 AM
Last Updated : 23 Apr 2017 11:32 AM

ஆந்திராவில் லாரி மோதி 20 பேர் உயிரிழந்த சம்பவம்: அமைச்சர்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

ஆந்திராவில் மக்கள் கூட்டத் துக்குள் லாரி புகுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற அமைச்சர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி காளஹஸ்தி நெடுஞ்சாலையில் உள்ள ஏர்பேடு போலீஸ் நிலையம் முன்பாக அமர்ந்து, மணல் கொள்ளையை தடுக்கக் கோரி நேற்று முன்தினம் முனகல பாளையம் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது ரேணிகுண்டாவில் இருந்து கிருஷ்ணபட்டினம் நோக்கிச் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் படுகாயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சரு மான லோகேஷ் மற்றும் அமைச்சர்கள் அமர்நாத் ரெட்டி, நாராயணா ஆகியோர் நேற்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர். அத்துடன் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் படி சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அமைச்சர்கள் அனைவரும் முனகல பாளையம் கிராமத்துக்குச் சென்றனர். அப்போது அவர்களை நடு வழியிலேயே கிராம மக்கள் தடுத்து முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக திருப்பதி காளஹஸ்தி நெடுஞ்சாலையை விரிவுப்படுத்தக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதை நிறைவேற்றாத காரணத் தினாலேயே இந்த விபத்து நிகழ்ந்து 20 உயிர்கள் பரிதாபமாக பலியானதாக அமைச்சர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அச்சாலையை 4 வழிச் சாலையாக விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் லோகேஷ் உறுதி அளித்தார். அதன் பிறகே பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

உரிமம் இல்லை

இதற்கிடையே மதுபோதை யில் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் குருவய்யாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவரிடம் கார் ஓட்டுவதற்கான உரிமம் மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. அந்த உரிமத்தை வைத்துக் கொண்டு அவர் 2 ஆண்டுகள் லாரியை இயக்கி இருப்பது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x