Published : 31 Oct 2014 04:11 PM
Last Updated : 31 Oct 2014 04:11 PM
இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் அவரை நினைவுகூராமல் அருவருப்பான, சிறுபிள்ளை தனமான செயலில் ஈடுபட்டு பாஜக தனது கட்சியின் நிலையை உறுதிப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சர்தார் படேலின் 139-வது பிறந்த தினமான இன்று டெல்லி ராஜ்பாத்தில் ‘தேச ஒற்றுமை’ ஓட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, "ஒருமைப்பாட்டுக்காக பாடுப்பட்ட சர்தார் படேல் பிறந்த நினத்தில் 30 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் இதயத்தில் வாள் வீசி துளையிட்ட சீக்கியர்களுக்கு எதிரான சீக்கிய கலவரம் நடைபெற்றது. அந்த நாளில், நமது நாட்டின் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த மக்கள் கொல்லப்பட்டனர்" என்று கூறினார்.
இந்த நிலையில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் தியாகத்தை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு புறக்கணித்து தேசத் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை வழங்காமல் புறக்கணித்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவைரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆனந்த் ஷர்மா, "தேசத்துக்காக பாடுபட்ட தலைவருக்கு மரியாதை செல்வதை தவிர்த்து பாகுபாடு காட்டி, சிறு பிள்ளைதனத்துடன் அவமரியாதையான செயலை செய்து பிரதமர் மோடி அரசு செய்துவிட்டது. இது பாஜக-வும் பிரதமர் நரேந்திர மோடியும் யார்? என்பதை மக்களுக்கு காட்டிவிட்டனர். ஒற்றுமைக்கான ஓட்டத்தை நடத்திய அவர்கள், நாட்டுக்காக உயிர் நீத்த பல தலைவர்களை மறந்துவிட்டனர்" என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது, இந்திரா காந்தியின் நினைவு தினத்தின்போது அவர் குறித்த ஆவணப்படங்கள் மற்றும் ஆட்சி சாதனைகள் ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்று அவரது நினைவு தினத்தில் மத்திய அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ ஆகியோர் மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி நினைவிடத்தில் மரியாதை செய்யவில்லை. அதே நேரத்தில் ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில் தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வதாக குறிப்பிட்டார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு தெரிவிக்கையில், "சர்தார் பட்டேலின் வாழ்க்கை நாட்டு மக்கள் பின்பற்றக்கூடியது. இதற்காக ஒற்றுமை ஓட்டம் நடத்தி மக்களை வாழிநடத்துவதே அரசின் நோக்கமே தவிர, மற்ற தலைவர்களை சிறுமைப்படுத்தும் நடவடிக்கை நடக்கவில்லை.
சர்தார் படேல் சுதந்திர போராட்டத்துக்காக போராடியவர், நாட்டை ஒன்றுபடுத்த நினைத்தவர். வரலாற்றின் அனைத்து தலைவர்களுக்கு தனி இடம் உண்டு. அதனை யாரும் மறுக்க முடியாது.
காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் கண்ணோட்டத்திலிருந்து அனைத்தையும் பார்க்க வேண்டியதில்லை. அப்படி நேரு குடும்ப கண்ணோட்டத்தில் அனைத்தையும் அவர்கள் பார்த்தார்கள் என்றால் அவர்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்களாக பார்க்கப்படுவார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT