Published : 26 Feb 2014 03:22 PM
Last Updated : 26 Feb 2014 03:22 PM

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய உச்ச நீதிமன்றம் ஆணை

முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தராதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது.

இதுகுறித்து நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், "நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான சுப்ரதா ராய்க்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கிறோம். அவரை கைது செய்து மார்ச் 4-ம் தேதி 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்" என்றனர்.

முன்னதாக, சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, மரணப் படுக்கையில் உள்ள தனது 92 வயது தாயாரை கவனிக்க வேண்டியிருப்பதால், சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார். ராயின் தாயார் உடல்நிலை குறித்து சஹாரா மருத்துவமனை வழங்கிய மருத்துவ சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதைக் கேட்ட நிதிபதிகள் "நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சுப்ரதா ராயின் மனுவை செவ்வாய்க்கிழமையே நிராகரித்து விட்டோம். இந்நிலையில், மீண்டும் அவர் ஆஜராகாததற்காக கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது" என்றனர்.

இதற்கிடையே, சஹாரா குழும நிறுவனங்களின் இயக்குநர்கள் 3 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை ஆஜராகினர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், சஹாரா நிறுவனத்தின் 3 இயக்குநர்களும் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

முதலீட்டாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக திரட்டிய ரூ.20 ஆயிரம் கோடியை நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பித் தராத சஹாரா குழுமத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெறுகிறது. இதன்மீது கடந்த 20-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதலீட் டாளர்களுக்கு நிதியை திருப்பித்தராததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

அத்துடன், சஹாரா குழும தலைவர் மற்றும் சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட், சஹாரா இந்தியா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர்களான ரவி சங்கர் துபே, அசோக் ராய் சவுத்ரி மற்றும் வந்தனா பார்கவா ஆகியோர் 26-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x